முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திங்கட்கிழமை, 7 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்  - திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 14-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 26-ம் தேதி திருக்கல்யாணமும், 27-ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பெரும் விழாவாக ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பங்குனி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா வருகிற 14-ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடர்ந்து வருகிற 28-ம்தேதி வரை நடக்கிறது.

திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19-ம் தேதி இரவு 7 மணி அளவில் கைப்பார நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அிக எடை கொண்ட வாகனமான வெள்ளியிலான யானை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருள்கிறார். அப்போது கோவில் சீர்பாதர்கள் மற்றும் பக்தர்கள் மற்றும் தங்களது உள்ளங்கைகளில் வெள்ளி யானை வாகனத்துடன் முருகப்பெருமானை கைப்பாரமாக சுமந்து ஓட்டமும், நடையுமாக செல்கிறார்கள். அவை மெய்சிலிர்க்கும்படியாக இருக்கும்.

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக வருகிற 23-ம் தேதி பங்குனி உத்திரமும், 24ம் தேதி சூரசம்கார லீலையும், 25-ம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ம் தேதி பகல் 1 மணி அளவில் முருகப்பெருமான், தெய்வானைக்கு திருக்கல் யாணம் நடக்கிறது. இந்த நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்புரங்குன்றத்தில் எழுந்தருள்கின்றனர்.

தாய், தந்தையான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் முன்னிலையில் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும். திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக வருகிற 27-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணி அளவில் கோவில் வாசலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவல பாதையில் தேர் வலம் வருகிறு. லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம் செய்கிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்