முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணை வீட்டில் மது விருந்து : கலாபவன்மணி மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள் உடல்பாகங்கள் ரசாயன பரிசோதனை

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம்  - நடிகர் கலாபவன் மணி பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கார் டிரைவர் மற்றும் உதவியாளர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கலாபவன் மணிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடலில் மெத்தனால் எனஅற விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் அதிக அளவில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கலாபவன் மணியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கலாபவன்மணியின் மரணம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 45 வயதே நிரம்பிய கலாபவன் மணியின் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கிளம்பியது. அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் இது பற்றி போலீசிலும் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து திருச்சூர் போலீஸ் டி.எஸ்.பி சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கலாபவன் மணியின் பண்ணை வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பண்ணை வீட்டில் மது விருந்து நடந்ததும், இந்த விருந்தில் மலையாள சிரிப்பு நடிகர் ஜாபர் என்பவர் பங்கேற்றதும் போலீஸ் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜாபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மது விருந்தில் பங்கேற்றதை ஒப்புக் கொண்டார். தான் அங்கிருந்து செல்லும் வரை கலாபவன்மணி ஆரோக்கியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். போலீசார் பண்ணை வீட்டில் ஆய்வு செய்த போது அங்கு மது அருந்தி வாந்தி எடுத்த தடயமும், இதை சுத்தம் செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

தனிப்படை போலீசார் கலாபவன் மணி யின் கார் டிரைவர், மானேஜர், சமையல் காரர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளன. இதற்கிடையில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கை போலீசாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கலாபவன்மணியின் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் மெத்தனால் அதிக அளவில் கலந்திருந்ததால் உடல் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்காக காக்க நாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவில் தான் கலாபவன் மணி மரணத்தில் உள்ள மர்மம் பற்றி தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்