முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

பழனி :  பழனிகோவிலின் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் முதன்மையான திருவிழா பங்குனி உத்திரம் ஆகும்.இந்த திருவிழாவிற்கு திண்டுக்கல், ஈரோடு, கரூர்,கோவை, நாமக்கல், தர்மபுரி, உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரியாற்றில் தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த திருவிழா நேற்று காலை 10.45மணிக்கு ரிஷப லக்னத்தில் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தையொட்டி வாஸ்து சாந்தி, அஸ்திர தேவர் உலா, கிராம சாந்தி, புண்ணியாகவாஜனம், விநாயகர் பூஜை நடந்தது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வேல்,மயில், சேவல், வளர்பிறை நிலவு, சூரியன் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

இதில் பழனி கோவில் இணையாணையர் ராஜ மாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில் குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கன்பத் ஹோட்டல் ஹரிகரமுத்து, வேல்ஸ்கோட் உரிமையாளர் பாஸ்கரன், கட்டிடவியல் வல்லுனர் நேருஉள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று பிற்பகல்12.30 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதரராக சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளல் நடந்தது. இரவு 8மணிக்கு சன்னதி வீதி மற்றும் கிரி வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது. 22ம்தேதி இரவு 7.30மணிக்கு மேல் 8.30மணிக்குள் துலாம் லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 23ம்தேதி நடக்கிறது. அன்று காலை4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தீர்த்த வாரிக்கு எழுந்தருளலும் காலை 6மணிக்கு தீர்த்தம் வழங்குதலும் காலை 11மணிக்குமேல் 12மணிக்குள்மிதுன லக்னத்தில் தேர் ஏற்றமும் மாலை 4.30மணிக்கு கிரி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்