Idhayam Matrimony

தி.மு.க காங்கிரஸ் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: கூடுதல் இடம் கேட்டு அடம் பிடிக்கும் காங்கிரஸ்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தி.மு.க காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இத்தகவலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங். மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத்தே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தமிழக சட்டசபைக்கு வரும் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. அடுத்த மாதம் 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 27 நாட்கள் உள்ளன. இந்தநிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது 5 முனை போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஒரு அணியாகவும், தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க ஒரு அணியாகவும், பா.ஜ.க ஒரு அணியாகவும், கடைசியில் பா.ம.க ஒரு அணியாகவும் ஆக 5 முனை போட்டி இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த ஏற்கெனவே 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான அந்த குழுவில் கோபிநாத், திருநாவுக்கரசர், கருஷ்ணசாமி, தங்கபாலு, யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும் நேற்று காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களை இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பிறகு அவர்கள் நேராக கோபாலபுரம் புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க தரப்பில் கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துறைமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடந்தும் தி.மு.க காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த விஷயத்தில் இழுபறி நிலையே நீடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தி.மு.க விட்டுக் கொடுத்தது. 2011-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அதனால் மூத்த தலைவர்களின் நெருக்கடிக்கு தி.மு.க வளைந்து கொடுத்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. இருந்தாலும் கூட்டணிக்கு தே.மு.தி.க வராததால் காங்கிரஸ் கட்சி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கூடுதல் தொகுதிகளை கேட்கிறது. ஆனால் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க.வுக்கு மனமில்லை. 30 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என்று தி.மு.க கூறிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. ஆனால் காங்கிரசோ குறைந்தபட்சம் 40 தொகுதிகளாவது கேட்டுப் பெறவேண்டும் என்ற மனநிலையில் உள்ளது. இந்த பேச்சை முடித்துக் கொண்டு குலாம் நபி ஆசாத் அங்கிருந்து புறப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் குலாம் நபி ஆசாத், ஆலோசனை நடத்தினார். முன்னதாக நிருபர்களை சந்தித்த அவர் எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவர்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறோம். நாங்களும் மேலிடத்தில் பேசுவோம் அதன்பிறகே எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். சுருக்கமாக சொன்னால் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இழுபறி நிலையே நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்