முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதன்கோட் தாக்குதல்: பாகிஸ்தான் விசாரணைக்குழு இந்தியா வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணை செய்ய பாகிஸ்தான் குழு இந்தியா வந்துள்ளது. அந்த குழுவில் பாகிஸ்தானின் உளவுதுறையான ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரி ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளம் பாகிஸ்தான் எல்லைக்கு 35 கிலோ மீட்டர் அருகாமையில் உள்ளது. இந்த விமானப்படை தளத்திற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் 6 தீவிரவாதிகள் கடந்த ஜனவரி மாதம் 2ம்தேதியன்று வந்தனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து வந்தார்கள். இதனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பதை விமானப்படையினரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். இதில் 7 இந்திய வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர்.

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த அழைப்புகளை கண்காணித்த இந்திய உளவுத்துறை இது குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளித்தது. இதன் பேரில்  குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇந்திய அரசு  வலியுறுத்தியது.

இந்த நிலையில் பதன் கோட் தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்கு பாகிஸ்தானில் இருந்து ஒரு குழு டெல்லிக்கு நேற்று வந்தது. அந்த குழுவில் மொத்தம் 5பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரி ஆவார். அந்த குழுவினர் இந்திய புலனாய்வுத்துறையினர் (என்.ஐ.ஏ)நடத்திய விசாரணை விவரங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.

பாகிஸ்தான் விசாரணைக்குழுவை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் டெல்லியில்உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் வரவேற்றார்கள். அந்த குழுவினர் செவ்வாய்கிழமையன்று பதன் கோட் விமானப்படை தளத்திற்கு செல்கிறார்கள். பாகிஸ்தான் விசாரணைக்குழுவினர் பாகிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளனர்.

இந்த குழுவில் பாகிஸ்தான் பஞ்சாப் தீவிரவாத தடுப்பு பிரிவின் தலைவர்  முகமது தாகிர் ராய், லாகூர் உ ளவுத்துறை துணை டைரக்டர் ஜெனரல்  முகமது ஆசிம் அர்ஷாத், ஐ.எஸ்.ஐ. அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தன்வீர் அகமது, ராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் இர்பான் மிர்சா மற்றும் குஜ்ரன் வாலா தீவிரவாத தடுப்பு துறையின் அதிகாரி ஷாகித் தன்வீர் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் விசாரணைக்குழு என்.ஐ.ஏ தலைமையகத்திற்கு இன்று காலை செல்கிறது. அங்கு 90நிமிடம் பதன் கோட் தாக்குதல் விசாரணை குறித்த விவரங்களை என்.ஐ.ஏ . அதிகாரிகள் விளக்குகிறார்கள். மதியத்திற்கு பின்னர் பாகிஸ்தான் குழுவினர் தங்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

பதன் கோட் தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங் , அவரது நகை விற்பனை நண்பர் ராஜேஷ்வர்மா, மற்றும் சமையல்காரர் மதன் கோபால் மற்றும் காயமடைந்த 17பேர் பாகிஸ்தான் விசாரணைக்குழுவினரிடம் தங்கள் சாட்சி வாக்குமூலங்களை அளிக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்