முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து காங். செய்தி தொடர்பாளர் போட்டி

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த காங். செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அங்கு நான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும் தொகுதியை கேட்டுப் பெறாத இளங்கோவனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகுதி காங்கிரசுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி கடந்த சில மாதங்களாக உறுதியோடு இருந்தார். மேலும் தானே போட்டியிடப் போவதாக நினைத்து தேர்தல் பணிகளையும் அவர் துவக்கி விட்டாராம். இந்தநிலையில் தான் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வுக்கே ஒதுக்கப்பட்டது. இதனால், ஜோதிமணி கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்த தொகுதியை கேட்டுப் பெறும் விசயத்தில் தி.மு.க. மேலிடத்திற்கு, தமிழக காங். தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 தொடர்ந்து அவர் கூறியதாவது.,

அரவக்குறிச்சியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன். அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து மாறி வேறு எங்கும் போட்டியிடும் எண்ணம் இல்லை. 9 மாதத்திற்கு முன்பாக பரப்புரை ஆரம்பிக்கும் போதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் அனுமதி பெற்றே ஆரம்பித்தேன். ஆனால், போகப் போக அவருடைய அழுத்தம் குறைந்துவிட்டது. தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ் கூட்டணியில் இந்தத் தொகுதியைப் பெற அவர் அதிக அழுத்தம் கொடுக்கவில்லை.

என்னைப் பொறுத்த வரையில் நான் நியாயம் கேட்கின்றேன். கரூர் மக்களின் வாழ்க்கையை ஒட்ட உறிஞ்சுகிற ஒரு வேட்பாளரை எப்படி கட்சி ஆதரிக்க முடியும்? காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை இளைஞர் காங்கிரசினரையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் பணியில் தமிழக காங். தலைமை ஈடுபட்டிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு இரண்டு நாட்களாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் தலைவரால் அதனைப் பெற முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படியெனில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நீங்கள் (இளங்கோவன்) சென்றுவிட்டீர்கள் என்று நான் குற்றஞ்சாட்டுகின்றேன்.

ராகுல் காந்தி அவர்கள் சொல்வது போல மக்களை முன்னிலைப்படுத்திய அரசியலையே நான் முன்னெடுத்திருக்கின்றேன். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை ஒழித்துக் கட்ட தமிழகத் காங். தலைவர் முயல்கிறார். நிச்சயமாக சுயேட்சையாக போட்டியிடுவேன். தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமி மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளவர். அதனால் என்னைப் போன்ற வேட்பாளரையே மக்கள் விரும்புகின்றனர். மக்கள் ஆதரவு எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் தொகுதிக்கான கவுரவத்தினை மீட்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.நான் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பேன். காங்கிரஸ் மற்றும் மத்திய தலைமையுடன் எனக்கும் எந்த மனவேறுபாடும் இல்லை. காங்கிரஸின் கொள்கை நிலைப்பாடுகளை நான் மதிக்கின்றேன். பின்பற்றுகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தி.மு.க. - காங். கூட்டணியில் ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை எதிர்த்து அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரசின் செய்தி தொடர்பாளரே போட்டியிட உள்ளார். இதே போல செய்யாறு தொகுதியை காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியை பெற்றுத் தராவிட்டால் பதவியிலிருந்து விலகப்போவதாகவும் தி.மு.க.வினர் மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதன்மூலம் தி.மு.க. - காங். கூட்டணியில் துவக்க நிலையிலேயே குழப்பம் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்