முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கருணாநிதி வீட்டுமுன் திமுகவினர் முற்றுகை போராட்டம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, பாளையங்கோட்டை தி.மு.க வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் அக்கட்சி தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மேலும் தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே போராட்டமும், மறியலும் நடத்தி வருகிறார்கள். இதனால், தி.மு.க மேலிடத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் அறிவிக்கப்பட்டார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட முதல் நாளன்றே திமுகவினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தினார்கள்.

பாளையங்கோட்டையில் அவரது உருவபொம்யையும் எரிக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்காண திமுகவினர் வேன்களில் புறப்பட்டு சென்னை சென்றனர். சென்னையில், நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி வீட்டுமுன்பு திரண்ட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட அவர்கள். அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுபற்றி தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

கடந்த 15 ஆண்டுகளாக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவாக இருந்துள்ள மைதீன்கான் தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யவில்லை. கட்சியினரையும் அவர் மதிப்பதில்லை. இந்த தொகுதியில் மொத்தம் 35 வட்டங்கள் உள்ளன. இதில் 31 வட்டசெயலாளர்கள் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கு வந்துள்ளோம். கடந்த 2006 -ம் ஆண்டு தேர்தலிலேயே அவர் மயிரிழையில் தான் வெற்றி பெற்றார். தொகுதியில் அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதனால், ஓட்டுக்கேட்கவே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் பல ஊர்களில் இதேபோல தி.மு.க வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தி.மு.க வேட்பாளர் கணேசனுக்கு எதிராக திமுகவினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.  ஆலங்குடி தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆலங்குடி பாரதிநகரை சேர்ந்த டாக்டர்.சதீஸ் அறிவிக்கப்பட்டார். இவர் அப்பகுதியில் அறிமுகம் இல்லாதவர் என்பதால், அவருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்.சதீசுக்கு பதில் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி இவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கோவை மாவட்டம், உடுமலை தொகுதி தி.மு.க வேட்பாளரை எதிர்த்தும், சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அரவிந்த் ரமேசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக கோஷமிட்ட கட்சியினர் அவரது கொடும்பாவியையும் எரித்தனர். இப்படியாக தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களுக்கு அவர்களது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கருணாநிதி வீட்டுமுன்பே கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago