முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, சித்திரை திருவிழாவில் இன்று 8ம் நாள் நிகழ்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இரவு பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுவாமி அதிகார நந்திகேஸ்வரர் வாகனத்திலும், அம்மன் யாளி வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இன்று (ஏப்.17) காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் தங்கப்பல்லக்கில் மேலமாசி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதினம் கட்டுச்செட்டி மண்டபம் செல்கின்றனர். இரவு 7.35 மணியில் இருந்து 7.59 மணக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவில் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னிதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சி அம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பிப்பார். பின்னர் தங்கம், வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் 4 மாசி வீதிகளிலும் எழுந்தருள்வர். நாறை (ஏப்.18) திக்விஜயமும், ஏப்.19 காலை 8.30 மணி முதல் 8.54 மணிக்குள் அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதற்காக ஆடி வீதிகளில் உள்ள திருமண மண்டபம் பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்தை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக, பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே இருந்தும் பக்தர்கள் திருமணத்தை கண்டுகளிக்க வசதியாக சித்திரை வீதிகளில் இரண்டு பெரிய டிவி திரைகள் பொருத்தப்பட்டு வருகின்றது. ஏப்.20ம் தேதி காலை 5 மணிக்கு 4 மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் ஏப்.20 முதலே அழகர்கோவில் திருவிழாவும் துவங்குகிறது.

மதுரையின் முத்திரைக்குரிய விழா நிகழ்ச்சிகள், அடுத்தடுத்து தொடர இருப்பது, பக்தர்களை பரவசப்படுத்தி, விழாவை களைகட்ட வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்