முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

ஹைதராபாத் : ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன் ரைசர்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களுக்கு மட்டுமடுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் அணிக்காக முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் தனது கட்டர்கள் மற்றும் யார்க்கர்களை துல்லியமாக வீசி 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் டேவிட் வார்னர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார்.  வார்னர் தனது அரைசதத்தை 23 பந்துகளில் விளாசினார். 3-வது வெற்றியைப் பெற்ற சன்ரைசர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கொல்கத்த, டெல்லி அணிகளுக்குப் பிறகு 3-ம் இடத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பேட்டிங்கைத் தொடங்கிய போது புவனேஷ் குமாரின் அவுட் ஸ்விங்கரைத் துரத்தி முரளி விஜய் 3-வது ஓவரில் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு மனன் வோரா சில பவுண்டரிகளை அடித்தார், இதில் கவர் திசையில் அடித்த சிக்ஸ் அவருக்காக பேசும். 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் வோரா 25 ரன்கள் எடுத்த நிலையில் இல்லாத சிங்கிளுக்காக ஓடி கவர் திசையில் தவணின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். முழு டைவ் அடித்து ரீச் ஆனாலும் மட்டை கிரீஸின் மேல் காற்றில் இருந்தது.

இதன் பிறகு மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் மேலும் கிங்ஸ் லெவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி, 5 பந்துகளில் டேவிட் மில்லர், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை வெளியேற்றினார். 3-வது முறையாக ஒரே ஓவரில் இருவரும் இந்தத் தொடரில் அவுட் ஆகியதும் குறிப்பிடத்தக்கது. ஷான்மார்ஷ் 34 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 எடுத்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டருக்கு எல்.பி.ஆனார்.

ஆனால் ஐபிஎல் அறிமுக வீரர் நிகில் நாயக், அக்சர் படேல் ஆகியோர் 6-வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் ஓரளவுக்கு தேறியது. அக்சர் படேல் 17 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். கடைசி 7 ஓவர்களில் கிங்ஸ் லெவன் எடுத்த 54 ரன்களில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்தது கவனிக்கத்தக்கது. ஆஃப் கட்டர்கள், யார்க்கர்கள், ஸ்லோ பவுன்சர்கள் என்று அவர் அசத்தினார்.

மீண்டும் ஷிகர் தவண், வார்னர் விக்கெட்டைக் கொடுக்காமல் ஜெயிக்க வேண்டுமென்று களமிறங்கினர், தவண் முதல் 2 ஓவரில் 2 அருமையான கவர் டிரைவ்களை ஆடி பவுண்டரிக்கு விரட்டினார், பிறகு வார்னர் (சாத்து) முறை. சந்தீப் சர்மாவை லாங் ஆஃபில் இரண்டு ஷாட்களை அற்புதமாகத் தூக்கி அடித்து பவர் பிளே முடிவதற்குள் 6 பவுண்டரிகளை விளாசினார். சன் ரைசர்ஸ் 65/0 என்று அபாரத் தொடக்கம் கண்டது. வார்னர் 59 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆதித்ய தாரே முதல் பந்தில் ரன் அவுட் ஆனார். வார்னர் ஆட்டமிழந்த பிறகு தவண் நின்று ஆடும் முடிவை எடுத்தார். தவண் 44 பந்துகளில் 45 ரன்களையும், இயன் மோர்கன் 25 ரன்களையும் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் துளிர் விட்ட ஒரு துளி நம்பிக்கையும் காற்றில் கரைந்தது.

ஆட்ட நாயகனாக மிகச்சரியாக முஸ்தபிசுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்