முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த 12 நடவடிக்கைகள்: தேர்தல் ஆணையம் பட்டியல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தேர்தலில் சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த சோதனை நடவடிக்கை, கண்காணித்தல், பணம் பறிமுதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: 

* 2016 சட்டமன்றத் தேர்தலின்போது கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துவதையும் வாக்காளர்களை கவர்வதற்கான வாய்ப்பையும் தடுக்கும் நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ மூலமான கண்காணிப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும்.

* காவல்துறை மட்டுமின்றி, வருமான வரித்துறையின் விசாரணை இயக்குநரகம், சுங்கவரித் துறை போன்ற இதர அமைப்புகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறையின்போதும் மதுபானம், போதைப் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேமிப்பு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வரும்படி மாநில கலால் வரித் துறையும் காவல்துறை அதிகாரிகளும் பணிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 4, 2016 தேதியிலிருந்து 702 பறக்கும் படைகள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலுமாக மொத்தம் 712 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோதமான வகையில் பணம், மது மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது குறித்த புகார்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

* தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் குறித்த அதிகாரபூர்வமான அறிவிக்கை ஏப்ரல் 22, 2016 அன்று வெளியிடப்பட்டது. பணத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சிகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப் பிரிவுகளையும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

சோதனை மேற்கொள்வது, பறிமுதல் செய்வது போன்றவை உள்ளிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதிலும் விரிவான ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. * தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 22, 2016 அன்று தமிழ்நாட்டில் உள்ள வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

புலன்விசாரணை பிரிவு உருவாக்கியிருந்த தகவல் தெரிவிக்கும் ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் (சுமார்) ரூ. 5. 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் வழக்கமான வணிக ரீதியான செயல்களுக்குத் தொடர்புடையதல்ல என்பதோடு, இதில் பெரும்பகுதியானது ஹவாலா நடவடிக்கைகளோடு தொடர்புடையது எனவும் சந்தேகிக்கப்படுவதோடு, இதில் பெரும்பகுதியானது வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

* அதே நாளில், அதாவது ஏப்ரல் 22, 2016 அன்று, முன்கூட்டியே பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறையின் புலன்விசாரணை பிரிவு தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையில் ரூ. 4.72 கோடி மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டது. வேட்டிகள், சேலைகள் போன்ற வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் பதுக்கிவைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ரூ. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள் இந்தப் பணம் கைப்பற்றப்பட்ட அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை வேறெங்கும் கொண்டு செல்லாதவாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

*மேலும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படையானது ஏப்ரல் 22, 2016 அன்று இரு மாநில போக்குவரத்து பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த, எவ்வித ஆதாரமும் இன்றி பணத்தை வைத்திருந்த இரு பயணிகளிடமிருந்து ரூ. 1.35 கோடி பணம் கைப்பற்றியது.

* இதற்கு முன்பாக, மார்ச் 2016 -ல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, பல்வேறு செலவுகளை கண்காணிக்கும் குழுக்களால் மொத்தம் ரூ. 35.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் செயல்பாடுகள் நடைபெற்று வரும் காலத்தில் மாநிலம் முழுவதும் புலனாய்வு மற்றும் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துமாறும், தேர்தல் நடைமுறையில் கணக்கில் வராத பணத்தை ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் இதுபோன்ற சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. * பணம், மது, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திச் செல்வது மிகக் கண்டிப்பான வகையில் கண்காணிக்கப்படும். வாக்காளர்களை கையூட்டின் மூலம் கவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இத்தகைய செயல்கள் அனைத்திலும் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவுகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்களில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் பாரபட்சமாக நடப்பதை மிகவும் கடுமையாக கருதப்படும் என்பதோடு அத்தகைய தவறுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தேர்தலில் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகள் குறித்த தனது நடைமுறை உத்தியையும் தேர்தல் ஆணையம் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன்படி, பறக்கும் படைகள், நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது; பறக்கும் படைகளில் மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களை இணைத்துக் கொள்வது; மத்திய காவல்படைப் பிரிவுகளின் அலுவலர்களையும் இவற்றில் இணைத்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளும் இவற்றில் அடங்கும்.

* இத்தகைய தயாரிப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்க மாநிலத்தில் சிறப்பு பார்வையாளர்களின் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் குழுக்கள், பறக்கும் படைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தீவிர பங்கேற்பதற்காக இந்திய காவல் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயிற்சி அலுவலர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* நியாயமான முறையில் வாக்களிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும்படியும், நியாயமான வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் மத்தியில் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. A

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்