முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவருக்கு வழிநெடுக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா காரில் ஏறி நின்று மக்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இரட்டை விரலை காட்டினார்.அப்போது மக்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு என்று உற்சாகமாக குரல் எழுப்பி உறுதி கூறினார்கள்.

அடுத்த மாதம் 16-ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதி 7 தொகுதிகள் அ.தி.மு.க. தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. முதல் முறையாக 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான இரட்டை இலை களத்தில் உள்ளது.

வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி அன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களில் ஜெயலலிதா பேசினார்.

நேற்று முன்தினம் திருச்சியில் 7-வது நாளாக பிரச்சாரம் செய்தார்.முதல்வர் ஜெயலலிதா பேசும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் லட்சோபலட்சம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய தனது போயஸ் இல்ல தோட்டத்தில் இருந்து 12.05 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டார். அப்போது மகளிர் அணியை சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். ராதாகிருஷ்ணன் சாலை, மெரீனா கடற்கரை சாலை, பர்மாபஜார், ராயபுரம் பாலம், காசிமேடு வழியாக தண்டையார்பேட்டைக்கு முதல்வர் ஜெயலலிதா 12.22 மணிக்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை அவர் செய்தார்.

பின்னர் உறுதிமொழி படித்து அந்த உறுதிமொழி படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு அங்கிருந்து புறப்பட்டார். காரில் ஏற வந்தபோது அங்கு திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் விண்ணதிர வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது மக்களை பார்த்து ‘இரட்டை விரலை’ மகிழ்ச்சியுடன் காட்டினார். பின்னர் காரில் ஏறியபோதும் காரில் நின்று கொண்டு சிரித்தபடியே இரட்டை விரலை காட்டினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், ‘அம்மா இரட்டை இலைக்குதான் ஓட்டு’ என்று உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் இரட்டை இலைகளையும், இரண்டு விரல்களையும் காட்டி உறுதி அளித்தார்கள். பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.

அவர் சென்ற வழியெல்லாம் மக்கள் திரண்டிருந்தனர். எனவே அவரது கார் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. காரில் சென்று ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் வழங்கிய மலர்கொத்துக்களை பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள், நிர்வாகிகளை அழைத்து பேசினார். வேட்புமனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா வந்தபோது வழிநெடுக மக்கள் கூடியிருந்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தார்கள். ‘அம்மா வாழ்க’ என்று வாழ்த்து கோஷமிட்டனர். செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க கிராமிய நடனங்களுடன் ஜெயலலிதாவுக்கு எழுச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பர்மாபஜாரில் வணிகர்கள் அன்புடன் வரவேற்றார்கள். மீனவர்கள், இஸ்லாமியர்கள் பெருமளவில் திரண்டிருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் திரண்டு நின்று வரவேற்றார்கள். வழக்கறிஞர்கள் அணி தலைவர் வி.எஸ்.சேதுராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வரவேற்றனர்.

அண்ணா தொழிற்சங்கத்தினர், மாநகர அண்ணா போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தினர் செயலாளர் கே.எஸ்.அஸ்லாம் தலைமையில் அதி.மு.க. தொழிற்சங்க கொடிகளை ஏந்தி கோஷம் எழுப்பி வரவேற்றார்கள். கடந்த தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதன்பின் இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா 2–ம் முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். தங்கள் தொகுதி முதலமைச்சர் தொகுதி என்பதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட கூடுதலாக வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்ய தொகுதி மக்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்