முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் பெரும்பான்மை பெறுவதை தடுத்து நிறுத்த இரண்டு வேட்பாளர்கள் கூட்டணி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜனாதிபதி கட்சி அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்பை தடுத்து நிறுத்த இரு வேட்பாளர்கள் கூட்டணி அமைத்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், வெர்மாண்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு டிரம்புக்கும் டெக்சாஸ் செனட்டர் டெட் குரூசூக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்த கட்சியில் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட 1237 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற வேண்டும். டிரம்ப் இதுவரை 845 வாக்குகளையும் டெட் குரூஸ் 559 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் பெரும்பான்மை பெறுவதை தடுத்து நிறுத்த டெட் குரூசூம் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஒஹியோ மாகாண ஆளுநர் ஜான் கேசியும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அடுத்து நடைபெறும் ஓரிகான், நியூமெக்ஸிகோ மாகாண உட்கட்சித் தேர்தல்களில் இருவரும் நேருக்குநேர் மோதிக் கொள்வதை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.

ஓரிகான், நியூமெக்ஸிகோ தேர்தல்களில் டெட் குரூஸ் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டார். ஜான் கேசிக்கு ஆதரவாக செயல்படுவார். அதேபோல இண்டியானா மாகாணத்தில் டெட் குரூசூக்கு ஆதரவாக ஜான் கேசி செயல்படுவார். இரு வேட்பாளர்களும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் டொனால்டு டிரம்ப் பின்னடைவைச் சந்திப்பார் என்று தெரிகிறது. உட்கட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜூலையில் நடைபெறும் கட்சி மாநாட்டில் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளின்பேரில் கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராவதை தடுத்து நிறுத்த முடியும் என்று டெட் குரூஸ், ஜான் கேசி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்