முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா இன்று மதுரையில் பிரச்சாரம் செய்கிறார்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

மதுரை, முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை மதுரை வருகிறார். பாண்டிகோவில் ரிங்ரோடு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த சாதனையை அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நிகழ்த்தி உள்ளார். அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் ஜெயலலிதா 21 வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். 2-வது நாளாக விருத்தாசலத்தில் 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 3-வது நாளாக தர்மபுரியில் 11 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், நான்காவது நாளாக அருப்புக்கோட்டையில் 14 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 5-வது நாளாக காஞ்சிபுரத்தில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 6-வது நாளாக சேலத்தில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 7-வது நாளாக திருச்சியில் 67 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், 8-வது நாளாக பாண்டிச்சேரியில் 30 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஒரு இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை அடுத்த இடத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டம் மிஞ்சும் அளவிற்கு மக்கள் திரண்டு முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள். சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பை மக்கள் தந்து வருகிறார்கள்.

இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க அரசு செய்த சாதனைகளையும் அந்தந்த தொகுதிகளில் செய்துள்ள வளர்ச்சி திட்டங்களையும் பட்டியலிட்டு ஆதாரத்துடன் முதல்வர் ஜெயலலிதா பேசுவதை மக்கள் கவனமாக கேட்கிறார்கள். அவரது பேச்சு மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதை போலவும், வானத்தை கிழித்து வையகத்தை காட்டுவேன் என்பதை போலவும், மதுவை கொண்டு வந்து தமிழ் சமுதாயத்தின் தலைமுறையை பாலாக்கிய கருணாநிதி, மதுவிலக்கை உடனே அமுல்படுத்துவேன் என்று கூறுவதற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து, படிப்படியாக தான் மதுவிலக்கை கொண்டு பூரண மதுவிலக்கை நிச்சயமாக கொண்டு வருவேன் என்று பிரச்சாரக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார். இந்த உத்திரவாத்தை மக்கள் வரவேற்று வருகிறார்கள்.


அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 9-வது நாளாக இன்று மாலை மதுரையில் நடக்கிறது. பாண்டிகோவில் ரிங்ரோட்டில் நடைபெறும் இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரையாற்றுகிறார். மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க லட்சோபலட்சம் மக்கள் திரளுகிறார்கள். இதற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல், அலங்கார வரவேற்பு வளைவுகள், நுழைவு வாயில் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. அலைகடலென திரண்டு வரும் மக்கள் எவ்வித சிரமும் இன்றி முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்கவும், அவரை நேரில் பார்க்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் நடைபெறும் இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 24 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகிறார். மதுரை கிழக்கு - தக்கார் பாண்டி, மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு - வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கு - எஸ்.எஸ்.சரவணன், மதுரை மத்தி - மா.ஜெயபால், சோழவந்தான் - கே.மாணிக்கம், திருப்பரங்குன்றம் - எஸ்.எம்.சீனிவேல், திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி - நீதிபதி, ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் - கதிர்காமு, போடி - ஒ.பன்னீர்செல்வம், கம்பம் - எஸ்.டி.கே.ஜக்கையன், பழனி - குமாரசாமி, ஒட்டன்சத்திரம் - கிட்டுச்சாமி, ஆத்தூர் - ஆர்.விசுவநாதன், நிலக்கோட்டை - தங்கத்துரை, நத்தம் - ஷாஜகான், திண்டுக்கல் - சீனிவாசன், வேடசந்தூர் - பரமசிவம், காரைக்குடி - கற்பகம் இளங்கோ, திருப்பத்தூர் - அசோகன், திருவாடானை - நடிகர் கருணாஸ் ஆகிய 24 வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா இந்த பிரச்சார கூட்டத்தில் அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

இன்று மதுரை வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன்,செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், எம்.பி, எம்.எல்.ஏக்களும், நிர்வாகிகளும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் அம்மா திடலில் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ராட்சத பலூன்களை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று காலை பறக்கவிட்டனர். முன்னதாக மேடை மற்றும் பொதுமக்கள் அமரும் இடங்களை அவர்கள் சுற்றிபார்த்து பணிகளை ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், துணை மேயர் திரவியம், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், சி.தங்கம்,வில்லாபுரம் ஜெ.ராஜா, வேட்பாளர்கள் கே.மாணிக்கம், மா.ஜெயபால், எஸ்.எஸ்.சரவணன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, சண்முகவள்ளி, பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், நிலையூர் முருகன், ஜி.என்.அன்பு செழியன், ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜா, வட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்