முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் லஞ்ச விவகாரத்தில் சோனியா காந்திக்கு தொடர்பு என்று சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியதால் ராஜ்யசபாவில் கடும் கூச்சல்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி  -  அகஸ்டாவெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் லஞ்ச விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளது என பா.ஜ.க.தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியதைத்தொடர்ந்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தற்போது நடைபெற்று வரும் அமர்வில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

இந்த நிலையில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்ற போது வி.வி.ஐ.பி.க்கள் பயணம் செய்வதற்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பிரிட்டனில் உள்ள அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் இத்தாலியில் உள்ள பின்மெக்கானிக்கா நிறுவனம் ஆகும். இந்தியாவிற்கு விற்க நடந்த ஒப்பந்தத்தில் ஹெலிகாப்டரின் விலை கூடுதலாக போடப்பட்டு இருந்த விவகாரம் இத்தாலி கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது தெரிய வந்தது.

இந்த ஒப்பந்தத்தின் போது இந்திய தலைவர்களுக்கு ரூ360கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் கோர்ட் விசாரணையின் போது தெரிய வந்தது.  இந்த லஞ்ச விவகாரம் தற்போது இந்திய அரசியலை தற்போது கடுமையாக எதிரொலிக்க துவங்கியுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்த லஞ்ச ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளது என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டினார். அவரது இந்த கருத்து பாராளுமன்றத்தில் நேற்று கடும்  அமளியை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பிக்களும் , ஆளும் கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் காங்கிரசின் சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியினரின் இருக்கையை நோக்கி அடிக்க வந்தார்கள். அப்போது பாராளுமன்ற காவலர்கள் அந்த உறுப்பினர்களை அப்புறப்படுத்தினார்கள்.  சோனியா காந்தியை விமர்சித்த சுப்பிரமணிய சாமி அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏவின்  ஏஜென்ட்  என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கத்தினார்கள். அவர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டதால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் அமருமாறு அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்