முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கட்ட மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாளை (மே 1-ந் தேதி) தொடங்கும் முதல் கட்ட நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுத்துவிட்டது. திட்டமிட்டபடி மே 1-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த 2013-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தன.

இந்த சீராய்வு மனுக்களை நீதிபதிகள் அனில் ஆர். தவே, சிவ கீர்த்தி சிங், ஏ.கே. கோயல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்த நீதிபதிகள், மே 1-ந் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை முதலாவது கட்ட தேசிய தகுதி, நுழைவுத் தேர்வாக கருத அனுமதிக்கிறோம். முதல் கட்டத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்காதவர்கள், மறுவாய்ப்பாக ஜூலை 24-ந் தேதி நடத்தப்படும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை எழுதலாம்.  இந்தத் தேர்வை இரண்டாம் கட்டத் தேர்வாகக் கருத அனுமதிக்கிறோம். இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியிட்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் உள்ளிட்ட நடைமுறைகளை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் மே 1-ந் தேதி தொடங்கும் முதல் கட்ட மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு நேற்று கோரிக்கை விடுத்தது. மேலும் நுழைவுத் தேர்வுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இன்றே (நேற்றே) விசாரிகக் வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

மேலும், நடப்பாண்டில் கலந்தாய்வு முறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசும் வலியுறுத்தியது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அடுத்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை முன்வைத்தன. இதனை நேற்று பிற்பகலில் விசாரித்த சுப்ரீம்கோர்ட், மே 1-ந் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. திட்டமிட்டபடி மே 1-ந் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை மே 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்