முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மரங்களை வெட்டியதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 172 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு தான்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் - செம்மரங்களை வெட்டியதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 172 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது மற்றும் சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு வேண்டிய நிவாரண உதவியை வழங்கியது அ.தி.ம.க. அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஏதேனும் துன்பத்திற்கு உள்ளானால், ஓடோடிச் சென்று அவர்களை அரவணைத்து, பாதுகாத்து உதவிகளை வழங்குவது எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு தான். இலங்கையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் என்றாலும், ஒடிஸாவில் புயல் மழையில் தத்தளித்த மீனவர்கள் என்றாலும், இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், ஈரான் சவுதி அரேபியா வங்காள தேசம் சேஷல்ஸ்  என பல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் என்றாலும், உத்தரகாண்ட் மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவில் சிக்கியவர்கள் என்றாலும் அவர்களை எல்லாம் காப்பாற்றி தேவையான உதவிகளை அளித்தது எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். 

இது போன்றே, ஆந்திர மாநில வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்தவுடன், அவர்களைப் பற்றிய விவரங்களை ஆந்திர காவல் துறையினர் இடமிருந்து பெறுமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டேன். 

ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களின் விவரங்கள் பெறப்பட்ட பின்னர், அவர்களை உடனடியாக பிணையில் விடுவிக்கும்படி ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் நான் கடிதம் எழுதினேன். ஆந்திர முதல்வருடன் நான் தொலைபேசியிலும் பேசினேன். ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களை பிணையில் கொண்டு வர இரண்டு அரசு வழக்கறிஞர்களின் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்றை நான் அனுப்பி வைத்தேன். இந்த வழக்கறிஞர் குழு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆந்திர சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள்.

2013-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வன அலுவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 288 தமிழர்கள் மீது செம்மரக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டு திருப்பதியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தலைமையிலான வழக்கறிஞர் குழு திருப்பதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த வழக்குகளில் சரியான வாதங்களை எடுத்து வைத்து, இவர்கள் விடுதலைக்கு வழி காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர்கள் குழு நவம்பர் 2015 முதல் நடைபெற்ற 20 நீதிமன்ற விசாரணைகளின் போது திறமையான வாதங்களை எடுத்து வைத்தனர். 

அதன் காரணமாக 288 அப்பாவி தமிழர்கள் கடந்த பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.  2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த மனித உரிமை மீறல் குற்றம் நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அ.திம.க. அரசு மேற்கொண்டது.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசால் நிவாரணமாக வழங்கப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இறந்த 20 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது.   தி.மு.க.-வைப் பொறுத்தவரை மற்றவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு தாங்கள் தான் காரணம் என பொய் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள்.  அதே போன்று இந்த சம்பவங்களிலும் தி.மு.க-வினர் தான் நடவடிக்கை எடுத்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு நன்மை செய்தவர் யார் என்று நன்றாகத் தெரியும். தி.மு.க.-வின் பொய் பிரச்சாரங்களை கண்டு ஏமாந்து விட இங்குள்ள மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்