முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் உட்பகுதியில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வேலூர், தர்மபுரி, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் தற்போது அனல்காற்று வீசுவது சற்று குறைந்து காணப்படுவதால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இதமான காலநிலை நீடிக்கிறது. வரும் 4-ந்தேதி அக்னிநட்சத்திரம் என்ற கத்திரிவெயில் தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் வெப்பகாற்று வீச வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து ஓரளவுக்கு ஈரப்பதம் கலந்த காற்று வீசுகிறது. அந்த காற்று தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு வீசும். அதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்பதால் வெப்பத்தின் தீவிரம் சற்று குறையும். காலநிலையும் இயல்பை ஓட்டியே இருக்கும். கோடை மழையை பொறுத்தவரையில் தமிழகத்தின் உட்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 94 முதல் 96 டிகிரி வரை வெப்பம் இருக்கும். காற்று அதிகம் வீச வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்களும் கவனமாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்