முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் பேர ஊழல் விமானப்படை முன்னாள் தளபதி தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை

திங்கட்கிழமை, 2 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். கடந்த 2010ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத் தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி தியாகியிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. பின்னர் அவர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது,

இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.  இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலியில் உள்ள மிலன் நகர கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு அண்மையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கிருக்கிறது.

இதற்காக, ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஜே.எஸ்.குஜ்ராலை ஆஜராகும்படி சி.பி.ஐ. உத்தரவிட்டு இருந்தது. இதனால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். அப்போது குஜ்ராலிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.  அவரை வழக்கின் ஒரு சாட்சியாகவே விசாரித்தனர். எனினும், அவர் முன்பிருந்த நிலையிலேயே (சாட்சியாக) இருக்கிறாரா? என்பது குறித்த எந்த விவரத்தையும் சிபிஐ வெளியிட மறுத்துவிட்டது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு 2005ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது அதில் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய ஒப்பந்தத்தை பெறும் வகையில், அவற்றின் ஹெலிகாப்டர்கள் பறக்கும் உயரத்துக்கு ஏற்ப, ஆதாவது 19 ஆயிரம் அடி உயரம் என்பதை 15 ஆயிரம் அடியாக குறைத்ததாக எஸ்.பி.தியாகி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியை சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக இவரிடம் ஏற்கனவே சிபிஐ கடந்த 2013ம் ஆண்டு விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்