முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவங்கியது

திங்கட்கிழமை, 2 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமாக வந்து வாங்கி சென்றனர். மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ. உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று (2-ம் தேதி) துவங்கியது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் காலை 8 மணி முதல் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. 4 கவுண்டர்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட கியூ வரிசையில் நின்று மாணவிகள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். பிற்பகல் வரை இந்த கல்லூரியில் ஒரே நாளில் சுமார் 2,500 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல சென்னை மாநில கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி், நந்தனம் ஆண்கள் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி் உள்ளிட்ட அரசு கல்லூரிகளிலும் விண்ணப்ப வினியோகம் துவங்கியது. இங்கும் மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பத்தை வாங்கி சென்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கி, சேர்க்கையையும் விரைவாக நடத்தி முடிக்க அரசு கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன. விண்ணப்ப விநியோகம் பிளஸ்-2 முடிவுகள் வெளியான அடுத்த 10 நாட்கள் வரை விநியோகிக்கப்பட உள்ளன. பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அடுத்த 10 நாட்களில் தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். ஜூன் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, 16-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பிளஸ் -2 தேர்வை 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி உள்ளனர். பொறியியல் (பி.இ.) படிப்பில் சேர விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் பதிவு செய்து வருகிறார்கள். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் வழங்கும் பணி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக பொறியியல் படிப்பில் சேரும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு மாறாக கலை அறிவியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் 100-க்கு மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 148 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 500 சுயநிதி கல்லூரிகளும் இருக்கின்றன. இக்கல்லூரிகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் படிக்க இடங்கள் உள்ளன. சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்