முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விதி எண்.110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றம்: கருணாநிதி குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

திங்கட்கிழமை, 2 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : விதி எண் 110 ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டிற்கு மீண்டும் பதிலளித்துள்ளார். வேளாண்துறை உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து விளக்கமளித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை  விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 9 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் மூன்று துறைகளில்  நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

1. வேளாண்மைத் துறை
 மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.பருத்தி விவசாயிகளுக்கு நிச்சயமான பலன் அளிக்கும் என்று உறுதி இல்லாததால், அரசளவில் பரவலாக்கக் கூடாது என்ற விவசாயிகள் கருத்தினை ஏற்று, பி.டி.பருத்திச் சாகுபடியைப் பரவலாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாயப் பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்கள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடமாடும் விரிவாக்க மையங்களாக நடத்தப்பட்டுள்ளன.
 உழவர் பெருவிழாவின்போது நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்களில் 5.60 லட்சம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 2.98 லட்சம் ஒருங்கிணைந்த கையேடுகள் மற்றும் 5.54 லட்சம் தொழில்நுட்ப வழிகாட்டி கையேடுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், 29.79 கோடி ரூபாhய மதிப்பிலான இடுபொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 பாரம்பரிய வேளாண் பொருட்களான இளநீர், சிகைக்காய், பருத்தி மற்றும் சிறுதானியங்களின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை மக்களிடையே பரவலாக்கம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள 385 வட்டாரங்களிலும் தீவிர விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளன. 
 முன்னோடி திட்டமாக, டீசல் எஞ்சின்களுடன் கூடிய மழை தூவுவான் மற்றும் நகரும் தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகள், அதாவது Rain gun and Mobile Sprinklers 350 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.   
 தரிசு நிலங்களை சீர்திருத்தி உரிய நீராதார அமைப்புகளையும் உருவாக்கும் வகையில், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 9,775 ஏக்கர் நிலங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
 நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கான இயக்கங்களின் கீழ் நெல்லில் திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கங்களும், சிறு தானியங்களிலும், பயறு வகைகளிலும் செயல் விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 துவரை உற்பத்தித் திறனை “துவரை நடவு செய்தல்” தொழில் நுட்பம் மூலம் அதிகரித்திட 50,000 ஏக்கர் பரப்பளவில் நடவு துவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.  மேலும், 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டமும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், நீடித்த நிலையான கரும்பு உற்பத்தித் திட்டம் 19,854 ஹெக்டேர் பரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை திட்டங்களுக்கான தரமான இடுபொருட்கள் உரிய தருணத்தில் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், “சிறப்பு நோக்க அமைப்பு”, அதாவது Special Purpose Vehicle ஒன்று, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையரகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 14,363 விவசாயிகள் பயன்பெறும் வகையில்  54,083 வேளாண் கருவிகள் வாங்க 48 கோடி ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 தோட்டக்கலைத் துறைக்கென சேலம், நாமக்கல், தேனி, திருவண்ணாமலை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மாவட்ட தோட்டக்கலை பயிற்சி மற்றும் விரிவாக்க மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  வேளாண்மை இயக்குநரகத்தின் மூலம் 100 வட்டாரங்களில் விவசாய சேவைக்கான தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து துறைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் நபார்டு வங்கி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
 தோட்டக்கலை விளைபொருட்களின் உற்பத்தி பெருகவும், தோட்டக்கலை விவசாயிகட்கு நல்ல விலை கிடைக்கச் செய்யவும்,  “அச்சு மற்றும் ஆரம்”  அதாவது, Hub and Spoke model திட்டத்தின் கீழ் 33,809 ஹெக்டேர் பரப்பில் விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
 தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளநீருக்கான சிறப்பு வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் வாழைக்கென சிறப்பு வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.  மேலும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கட்டி   முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 
 விவசாயிகளுக்கு 2,541 சூரிய சக்தியினால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் மானிய விலையில் நிறுவப்பட்டுள்ளன.
 இடுபொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயப் பணிகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் ஆகியவற்றில் மகளிருக்கு பயிற்சி வழங்கும் “அம்மா பண்ணை மகளிர்  திறன் மேம்பாட்டு திட்டம்”  செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த திட்டத்தின் கீழ்,   770 “பண்ணை மகளிர் குழுக்கள்” அமைத்து, உரிய கடன் வசதி மற்றும் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளன.
 தமிழக விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் தரமான சான்று பெற்ற விதைகள் “அம்மா SEEDS” என்ற பெயரில் “அம்மா சேவை மையம்” விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
 புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுhர் ஆகிய இடங்களில் 3 வேளாண்மைக் கல்லுhரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
 தமிழ்நாட்டில் உணவு தானிய உற்பத்தியை மேலும் பெருக்கும் வகையில், “விவசாயிகள் சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க முறை” அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தத் திட்டத்தின்படி, 9 விவசாய உற்பத்தியாளர்கள் குழுக்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
 “பண்ணைப் பயிர் மேலாண்மைத் திட்டம்” என்னும் தகவல் தொழில்நுட்பம், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும் பணி நடைபெற்று வருகின்றன.
 வேளாண் பயிர்களில் மாவட்ட மற்றும் மாநில அளவில் அதிக மகசூல் பெற்ற விவசாயிகளுக்கு  பயிர் விளைச்சல் போட்டிகள் திட்டத்தின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நவீனத் தொழில் நுட்பங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கவும், பன்முக செயல்பாட்டு முனையமாக திகழ 100 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
 வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு நியாயமான வாடகைக்கு கிடைத்திடவும், இயந்திரங்களை பழுது நீக்கவும், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் 135 “வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்கும் சேவை மையங்கள்” அமைக்கப்பட்டுள்ளன.
 அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலுர், இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய 10 மாவட்டங்களில், அம்மாவட்டத்திற்கு உகந்த வகையில் அரசு அல்லது பொது மற்றும் தனியார் துறை அல்லது கூட்டு நிறுவனங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தனியார் தொழில்முனைவோர் மூலம் “வேளாண் பதப்படுத்தும் மாதிரி தொழிற்சாலை” அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
 பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ஏதுவாக, சாகுபடி பரப்பினை உயர்த்த துவரைப் பயிர் சாகுபடி ஓர் இயக்கமாகச் செயல்படுத்தப்பட்டு, நடவுத் துவரை 1.299 லட்சம் ஏக்கரிலும், துல்லியப்பண்ணையம் 1428.25 ஏக்கரிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
 கோயம்புத்தூரில் “மூலக்கூறு மரபியல் மகத்துவ மையம்”, செட்டிநாட்டில் “மானாவாரி பண்ணைய மகத்துவ மையம்”, திருச்சிராப்பள்ளியில் “மண்வளம் மகத்துவ மையம்”, மதுரையில் “புதுமை ஆய்வு மகத்துவ மையம்”, திருச்சிராப்பள்ளியில் “பண்ணை மகளிர் அறிவு மேம்பாட்டு மையம்”, பட்டுக்கோட்டையில் “எண்ணெய்ப் பனை மகத்துவ மையம்” உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
 சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த வேளாண் பணிகளை மேம்படுத்துவதற்காக வேலுhர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம், 5 மாதிரி இயற்கைக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கோடு 150 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரி கிராமங்களும், அதாவது Eco-Friendly Integrated Pest
Management Villages அமைக்கப்பட்டுள்ளன.
 7 புதிய திரவ உயிர் உரஉற்பத்தி ஆய்வகங்களும், அங்கக உரங்களின் சத்துக்களை ஆய்வு செய்வதற்கு 2 புதிய ஆய்வகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை பண்ணைய பணிகளை தரப்படுத்தி, இயற்கை பண்ணையத்தில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆய்வக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
 நவீன வேளாண்மையில் விதைப்பு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரையிலான பல்வேறு வேளாண் பணிகளுக்கு திறன் மேம்பாட்டுடன் கூடிய மனிதவள ஆற்றலை அதிகரிக்கும் வகையில் வேளாண் திறன் மேம்பாட்டு மையம் ஒன்று தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
 திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் நாயுடுமங்கலம், விழுப்புரம் மாவட்டம், திருநாவலுhரிலும் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றன.
 சூரிய சக்தி பயன்பாட்டினை விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கும்   வகையில், 50 விழுக்காடு மானியத்தில் 39 சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளன.
 காலத்தே வேளாண் பணிகள் மேற்கொள்வதற்கு வேளாண்மை  இயந்திரமயமாக்கும் திட்டம் மூலமாக மானிய விலையில் நெல் நடவு இயந்திரங்கள், பவர் டில்லர்கள்,  டிராக்டர்கள்,
சுழற் கலப்பைகள், விசைக்களை எடுப்பான்கள், பல்வகைப்பயிர் கதிர் அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
 மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் செயல் விளக்க தளைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
 நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களுக்கு உற்பத்தி மானியம் மற்றும் விநியோக மானியமாக 19 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 அரசுப் பண்ணைகளில் நீர் ஆதாரங்களை பெருக்கி,  தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கிடவும், தரமான விதை, நடவுச் செடி உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை விளக்கவும், படிப்படியாக மாதிரிப் பண்ணைகளாக தரம் உயர்த்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.   41  பண்ணைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 நடவு முறை துவரை, தரமான விதை உற்பத்தி, வரப்புப் பயிர் மற்றும் டி.ஏ.பி. இலை வழி உரம் தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன உத்திகளால் பயறு வகை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 பசுமைக் குடில் அமைத்தல், நிழல் வலைக்குடில்கள் அமைத்தல் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர்சாகுபடி முறைகளில் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்க முடியும் என்பதால், இத்தகைய தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பணிகள் நடைபெற்று வருகின்றன.
 சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும், நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு மானியம் தொடர்ந்து வழங்கப்பட்டு  வருகிறது.
 தமிழகத்தில் உள்ள 100 முன்னோடி விவசாயிகளுக்கு, தோட்டக்கலைப் பயிர்களில் நன்கு முன்னேறியுள்ள வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 6,880 விவசாயிகள் உள்நாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 காய்கறி சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள் அடங்கிய “நீங்களே செய்து பாருங்கள் தளைகளை”, நகர்ப்புற மக்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை திருச்சி மற்றும் மதுரை மாநகர மக்களும் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
 பாரம்பரிய இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானிய விலையில் மண்புழு உரம், அங்கக முறையில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் கொள்முதல், திரவ உயிர் உரங்கள், பாஸ்பேட் செறிவூட்டப்பட்ட இயற்கை உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் பயன்பாட்டை அதிகப்படுத்தி தொகுப்பு அணுகு முறையில் அங்ககக் கிராமங்கள் அமைக்கப்பட  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணிவியருக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தங்கும் விடுதிகள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிடவும், பயிர்களின் உற்பத்தித் திறனை உயர்த்திடவும், கறவை மாடுகள் / ஆடுகள் வளர்ப்புடன் இணைந்த ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் 10,271 ஹெக்டேர் பரப்பளவிலும், தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் 1,957 ஹெக்டேர் பரப்பளவிலும், பசுமைக்குடில் அமைக்கும் பணி 29,400 சதுர மீட்டர் பரப்பளவிலும் செயல்படுத்த நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

2. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை
 9,102 அங்கன்வாடி  மையங்களிலுள்ள சிறிய பழுதுகளும் பிற அங்கன்வாடி மையங்களில் உள்ள பெரிய பழுதுகளும் சரி செய்யப்பட்டுள்ளன.
 23.78 கோடி ரூபாய் செலவில் 13,984 மையங்களில்  குழந்தை நேய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
 27.21 கோடி ரூபாய் செலவில் 20,558 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 சத்துணவு மையங்களில் 10,647 பணியிடங்களும் அங்கன்வாடி மையங்களில் 10,694 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
 5,000 அங்கன்வாடி மையங்களுக்கு, 3.20 கோடி ரூபாய் செலவில் எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் அழுத்தக்கலன் (பிரஷர் குக்கர்) ஆகியவை வழங்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
 இரண்டு வண்ண உடைகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள 2,01,032 அங்கன்வாடி குழந்தைகளுக்கு 4.30 கோடி ரூபாய் செலவில் இரண்டு வண்ண உடைகள் 2012-2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
 2012-13 முதல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்கு 2 இணை சீருடைகளுக்கு பதிலாக 4 இணை சீருடைகள் வழங்கப்படுகிறது. மேலும், இப்பணியினை உரிய நேரத்தில் முடிக்க, தையற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, நாளது வரை 15,500 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
 முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 1992 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட,  196 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக 60.50 லட்சம் மற்றும் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 784 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் முதிர்வுத் தொகையினை, அப்பயனாளிகள் 18 வயது நிறைவு செய்தவுடன், அவர்களது உயர் கல்விக்கு பயன்படுத்தப்படும் வகையில், 20322 பயனாளிகளுக்கு 15.55 கோடி ரூபாய்  முதிர்வுத் தொகையாக விடுவிக்கப்பட்டு உள்ளது.
 திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு  24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வாராந்திர விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
 அங்கன்வாடி மையங்களில் எடையைக் கண்காணிக்கும் வகையில், தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும் 7.12 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது.
 கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 1 விடுதி வீதம்  11 பணி புரியும் மகளிர் விடுதிகளும், சென்னையில் 6 பணி புரியும் மகளிர் விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 பணி புரியும் மகளிர் விடுதிகளும் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
 அங்கன்வாடி மையங்களை “எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக”  தரம் உயர்த்த, இதுவரை 5,565 அங்கன்வாடி மையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் காய்ச்சல் அறிகுறி மற்றும் இதர நோய்களைக் கண்டறிய மின்னணு வெப்பமானி உள்ளடக்கிய முதலுதவி பெட்டிகள் 2.50  கோடி  ரூபாய் செலவில்  வழங்கப்பட்டுள்ளன.
 பணிக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 2.31 கோடி ரூபாய் செலவில் 211 மழலையர் பராமரிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
 அங்கன்வாடி பணியாளர்களுக்கும், சத்துணவுப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் திரல்தொகை  50 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டும் குறு அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், அங்கன்வாடி சமையலர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் திரல் தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
 மாற்றுத் திறனாளிகள் மாத உதவித் தொகை பெறுவதற்கான குறைபாட்டின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக்  குறைக்கப்பட்டுள்ளது.
 மாற்றுத் திறனாளிகள் மாத உதவித் தொகை பெறுவதற்கு ஆதரவற்றவராக (Destitute) இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

3. போக்குவரத்துத் துறை
 அரசு பேருந்துகளை இயக்குகின்ற 45 வயதிற்கு மேற்பட்ட 21,885 ஓட்டுநர்களுக்கு “முழு உடல் பரிசோதனை“ செய்யப்பட்டுள்ளன.
 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும் 
229 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் 393 வாரிசுதாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்  2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையான 47 கோடியே  71  லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளன.
 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள 4,688 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையான  96 கோடியே 57 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 31.3.2013 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின் பணியிடங்களை உள்ளடக்கி, மொத்தம்   16,661 பணியிடங்கள் மே மாதம் 2013-ல்  நிரப்பப்பட்டுள்ளன.
 4,511 பதிலி ஓட்டுநர்கள், 4,558 பதிலி நடத்துநர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலிப்  பணியாளர்கள் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
 மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில்  214 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
 17,451 மின்னணு பயண சீட்டுக் கருவிகள் அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 905-லிருந்து  1,074-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 திண்டுக்கல், காரைக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துப் பணிமனைகள் துவக்கப்பட்டுள்ளன.
 சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 16 புதிய பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சர்வதேசத் தரத்திற்கு இணையாக உறைவிடத்துடன் கூடிய ஓட்டுநர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
 6 புதிய பணிமனைகள் கட்டப்பட்டுள்ளன.  6 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில்  62 சிற்றுந்துகள் அதாவது Mini Bus Service அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
 சென்னை பெருநகரத்தில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை  134 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
 முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த பட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்யும் குழுமப் பயணிகளுக்கு  பயணத் தொகையில்  10 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
 மாநகர் / நகரப் பேருந்துகளில் தற்போது மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணத்துடன் கூடிய மாதாந்திர பயணச் சீட்டு வழங்கும் முறை புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
 பயணிகளின் வசதிக்காக புதுப்பிக்கப்படக் கூடிய கையடக்க பயண அட்டை வழங்கும்  திட்டம் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 1,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழங்காமையால், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்காக  38 கோடியே 91 லட்சம் ரூபாயை வழிவகை முன்பணமாக வழங்கி, ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
 ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் இருந்த 544 பேருந்துகளை மீட்க 39 கோடியே  73 லட்சம்  ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 சென்னை மாநகரில் உள்ள பல்வேறு வழித் தடங்களில் புதியதாக 110 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
 பேருந்துகளில், 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள்  கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில், குளிர்சாதன வசதி பேருந்துகள் தவிர மற்ற  அனைத்து பேருந்துகளிலும் மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  2,22,034 முதியோர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் பயண டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago