முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை தேர்தல்: பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் சென்னை வந்தனர்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் சென்னை வந்தனர். தமிழக சட்டசபைக்கு மே 16–ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய 22–ம் தேதி முதல் 29–ம் தேதி வரை 6 நாட்களில்  மொத்தம் 7,151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 3,019 மனுக்கள்  தள்ளுபடியானது. 4,132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த 2-ம் தேதி 336 பேர் வாபஸ் பெற்றனர். இதை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. 234 தொகுதியிலும் மொத்தம் 3,794 பேர் இறுதியாக களத்தில்  உள்ளனர். இவர்களில் 320 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.  சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி முடிவடைந்தது.

இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன்  செய்து வருகிறது. வருகிற 5–ம் தேதி முதல் வீடுதோறும் தேர்தல் கமிஷன்  சார்பில் பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்காக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் மொத்தம் 66,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவை அமைதியாக நடத்தவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்யவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

அந்த  வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க துணை ராணுவ படையினர்  வரவழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 52 கம்பெனி துணை ராணுவ படையினர் 16 சிறப்பு ரெயில்கள் மூலம்  தமிழகம் வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்ட 6 கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம்   2 ரெயில்களில் சென்னை  வந்தனர். அவர்கள் கடற்கரை ரெயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.

அவர்களில் 2 கம்பெனி ராணுவத்தினர் புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று  6 ரெயில்களில் 18 கம்பெனி துணை ராணுவ படையினர் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்தனர். இன்னும் அடுத்த சில நாட்களில் மேலும் 14 கம்பெனி துணை  ராணுவத்தினர் சென்னை வருகிறார்கள். அவர்கள் திருச்சி, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தேர்தல் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சென்னையில் 406 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக  கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவத்தினர்  நிறுத்தப்பட உள்ளனர். தமிழகம் வந்துள்ள துணை ராணுவப்படையினர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்