முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்

புதன்கிழமை, 4 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, உண்மையில் அரசுக்கு உள்ள பலம் குறித்து தெரிந்து கொள்ளலாமே என்ற யோசனை குறித்து மத்திய அரசு பதிலளிக்க மே 6 வரை அவகாசம் அளித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆட்சியைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் மார்ச் 22-ம் தேதி ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசிடம் நீதிபதிகள் 7 கேள்விகளை கேட்டிருந்தனர்.

இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, உண்மையில் அரசுக்கு உள்ள பலம் குறித்து தெரிந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரஸ்தோகி, சுப்ரீம்கோர்ட் யோசனையை மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டேன். ஆனால் அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை என்றார்.

உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம்கோர்ட் யோசனையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சுப்ரீம்கோர்ட் யோசனை குறித்து மத்திய அரசு பதிலளிக்க மே 6 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. ஒருவேளை மே 6-ம் தேதியன்று மத்திய அரசு நிலைப்பாடு குறித்து அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவிக்காவிட்டாலும் வழக்கு விசாரணை நடைபெறும். வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு மீதான இடைக்காலத் தடை நீடிக்கிறது என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்