முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியும், தி.மு.க.,வினரும் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

புதன்கிழமை, 4 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, விதி எண் 110-ன் கீழ் நான் அறிவித்த திட்டங்கள், பணிகளை நிறைவேற்றவில்லை என்று கருணாநிதியும், தி.மு.க.,வினரும் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அத்துடன், மேலும் 2 துறைகளில் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

12 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து நான் ஏற்கெனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும்  2 துறைகளில்  நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

1. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை:-

* சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சென்னை மாநகராட்சியில் சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சியில்  விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பரிவர்த்தனை ஆலோசகர்  (Transaction Advisor) நியமிப்பது தொடர்பான பணி நடைபெற்று வருகிறது.

* புதுக்கோட்டை  நகராட்சி நூற்றாண்டு நிறைவினையொட்டி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, சிறப்பு உதவித் தொகையாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

* ராமநாதபுரம் மாவட்டம், குதிரைமொழி மற்றும் துhத்துக்குடி மாவட்டம், ஆலந்தலை ஆகிய 2 இடங்களில் 1,355 கோடி ரூபாய் செலவில்  60 எம்எல்டி கொள்ளவுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, நிதி ஆதாரம் இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

* திண்டுக்கல் மாவட்டத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைக்க நடைபெற்று வரும் பணிகள் ஏப்ரல் 2017-இல் நிறைவு பெறும்.

* தஞ்சாவூர் மாவட்டத்தில்  125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

* கோயம்புத்துhர்  மாவட்டத்தில் 114.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* திருப்பூர்  மாவட்டத்தில்  5 ஊராட்சி ஒன்றியங்கள்  மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில்  76.44  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

* திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்தில் உள்ளது.

* ஆரணி, திருவத்திபுரம் மற்றும்  பெரியகுளம் ஆகிய 3 நகராட்சிகளில் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளுக்கான விலைப்புள்ளி கோரப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

* பள்ளிபாளையம், மேட்டூர், கோபிசெட்டிபாளையம், திருச்செங்கோடு, கும்பகோணம், ஆவடி, பூவிருந்தவல்லி, காஞ்சிபுரம், பொள்ளாச்சி, திருவண்ணாமலை, கரூர், நாகப்பட்டினம், நாகர்கோவில், ராஜபாளையம், மேட்டுபாளையம்,  நகராட்சிகள் மற்றும் திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தணி,  பழனி, பல்லவபுரம், உதகை நகராட்சிகள் சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர் மாநகராட்சிகளில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* நகராட்சிகளின் கணக்குகளை இன்றைய தேவைக்கேற்ப பராமரிக்கவும் நிதி மேலாண்மையை திறம்படுத்தவும் “தமிழ்நாடு நகராட்சி கணக்குப் பணி” என்ற பணியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

* தஞ்சாவூர் மற்றும்  திண்டுக்கல்  நகராட்சிகள்    தரம்  உயர்த்தப்பட்டு 19.2.2014  முதல் மாநகராட்சிகளாக இயங்கி வருகின்றன. காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வுநிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

* நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் மற்றொரு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பதற்கு அடல் நகர்புற புத்துணர்வு மற்றும் நகர்புற மாற்றங்களுக்கான  (AMRUT) திட்டத்தின்கீழ் 35 சதவீதம் நிதி ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  மீதமுள்ள நிதி ஜெர்மானிய நாட்டு நிதி நிறுவனத்தின் ( kfw) மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

* சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை நகருடன் இணைக்கப்பட்ட  14 பகுதிகளில் 303.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை நகருடன் இணைக்கப்பட்ட  4 பகுதிகளில்  121 கோடி  ரூபாய் மதிப்பீட்டில்  கழிவுநீரகற்றும் கட்டமைப்புத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான 79,988 நவீன தெரு விளக்குகள் (LED) அமைக்கப்பட்டுள்ளன. 30,012 நவீன தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* சென்னைப்  பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் 225 கி.மீ நீளமுள்ள 900 சாலைகளில் ஒருங்கிணைந்த சாலைகள் 290 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

* மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்துhர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், துhத்துக்குடி, வேலுhர் மற்றும் ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள்  திறக்கப்பட்டுள்ளன.

* சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில், காலை உணவிற்கு பொங்கல், சாம்பார் ரூ.5/-க்கும்,  இரவு வேளையில், இரண்டு சப்பாத்திகள் ரூ.3/-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.

* பிறப்பு இறப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடை குழாய் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, சொத்து வரி கேட்பு, கட்டட அனுமதி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சான்றிதழ் ஆகியவை கோரும்  விண்ணப்பங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் “அம்மா மக்கள் சேவை மையம்”  மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

* சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சி மற்றும் பெரிய குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 60 ஊரகக் குடியிருப்புகளுக்கு, வைகை அணையினை நீர் ஆதாரமாகக் கொண்டு 20 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்த, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

* சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம், மானாமதுரை, கண்டனூர், நாட்டரசன்கோட்டை, கோட்டையூர், புதுவயல், கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் ஆகிய 8 பேரூராட்சிகள் மற்றும் 2,297 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவேரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு, 933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்த, நபார்டு வங்கியிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

* கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடன் இறுதி செய்யப்பட்டு வருகிறது. 

* கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 9 ஊராட்சிகளைச் சார்ந்த 185 ஊரகக் குடியிருப்புகளுக்குப் பவானி ஆற்றினை, நீர் ஆதாரமாகக் கொண்டு 42 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

* ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மற்றும் நம்பியூர் ஒன்றியங்கள், காரப்பாடி மற்றும்  5 ஊராட்சிகளைச் சார்ந்த 88 ஊரகக் குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 11 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இது  ஜுலை,  2016-இல் நிறைவு பெறும்.

* விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி நகராட்சியிலுள்ள   தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு    திருவேங்கடம்  பேரூராட்சிக்கும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை   613 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மண்டல அளவிலான ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளிலும் மற்றும் நாகர்கோவில் நகராட்சியிலும் 631.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.

* கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீரான அழுத்தத்துடன் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், குடிநீர் விநியோகத் திட்டம் 451 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

* கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட எதிர் சவ்வூடு பரவுதல் முறையில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

* பட்டுக்கோட்டை  நகராட்சியின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு அந்நகராட்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

*கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 87 குடியிருப்புகளுக்கு 24.18 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

*திருப்பூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கு 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

* ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கே.சி.பாளையம், பள்ளபாளையம், காஞ்சி கோயில், நள்ளம்பட்டி, பெத்தம் பாளையம், குன்னத்தூர், ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் சென்னிமலை, பெருந்துறை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 492 ஊரகக் குடியிருப்புகளுக்கு 123 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

* தேனி மாவட்டம், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 16 ஊரகக் குடியிருப்புகளுக்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றிற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 

* நீராதாரங்களை பாதுகாத்து, சீரமைப்பதற்காக, நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் தொடங்குவதற்கான மாதிரிப் பணிகள் (Pilot Projects) நடைபெற்று வருகின்றன.

* திருச்சிராப்பள்ளி, கோயம்புத்துhர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஒவ்வொன்றிற்கும்பொருத்தமான, மோட்டார் அல்லாத வாகன போக்குவரத்திற்கான தனித் தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, மிதி வண்டிகளுக்கென தனிப் பாதைகள், மற்றும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றிற்கு அருகில் பொது மிதி வண்டிகள் பயன்பாட்டு வசதி Bicycle Sharing Facility ஆகியவை ஏற்படுத்தும் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* 10 நகராட்சிகள் மற்றும் 214 பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த திடக்கழிவு, மேலாண்மை பணிகள் 69 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

* எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பாய்வில் உள்ளன.

* சோழிங்கநல்லூரில் கூடுதலாக நாளொன்றுக்கு 54 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட மின் உற்பத்தி செய்யும் அமைப்புகளுடன் கூடிய புதிய கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் 65 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

* குடிநீர் விநியோகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக மொத்தம் 310 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய குழாய்கள் மற்றும் விடுபட்ட தெருக்களுக்கு புதிய குழாய் பதிக்கும் பணிகள் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன.

* சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்தில்  அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

* 510 பேருந்து நிறுத்தங்களில் நவீன பேருந்து நிழற் குடைகள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை வழங்கப்பட்டுள்ளது.

2. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை:-

* 10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட, விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிப்பதற்கென சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம், அதாவது, Centre of Excellence in Sports சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், மாணவிகளுக்கு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

* ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த 5 உயர்நிலை விளையாட்டு வீரர்கள், உயர்மட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

* ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டுள்ளன. இதுவரை, 53 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 8 கோடியே 93 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதி / பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 860-லிருந்து 1,100-ஆக  உயர்த்தப்பட்டுள்ளது.

* மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைத்திடவும், ஒவ்வொரு விடுதியிலும் 60 மாணவ மாணவியர்களுக்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்திடும் வண்ணம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

* சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதிய செயற்கை இழை தடகள ஓடுபாதை, இயற்கை புல் கால்பந்து மைதானம், புதிய பயிற்சி ஓடு தளப்பாதை, மின்னொளி உயர் கோபுரம், விளையாட்டு விடுதி மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

* உலக சதுரங்க கூட்டமைப்பின் வேண்டுகோளின்படி, உலக வாகையர் சதுரங்கப் போட்டி 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

* “முதலமைச்சரின் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம்” என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் இறகு பந்து உள்விளையாட்டரங்கம், கையுந்து பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம் அமைக்கும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

* தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போன்று “முதலமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிகள்” ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

* சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில், நடைபெறும் போட்டிகளில் பங்கு கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வசதிக்காக, நவீன தங்குமிடம் மற்றும் உணவுக் கூட வசதிகள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

* தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

* சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம் பன்னாட்டு அளவிலான போட்டிகள் நடத்திட ஏதுவாக அங்குள்ள செயற்கை இழை டென்னிஸ் ஆடுகளங்கள் மற்றும் மின்னொளி அமைப்புகள் போன்றவை புனரமைக்கப்பட்டுள்ளன.

* ஈரோடு மற்றும் திருநெல்வேலியில் முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையம் மற்றும் சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு உணவுப்படி நாளொன்றுக்கு ரூ.250/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 23 விளையாட்டு பள்ளி / விடுதிகளில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி உணவுப்படி ரூ.75/-லிருந்து ரூ.250/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தப் பயிற்றுநர்களின், மாதாந்திர மதிப்பூதியம் 8,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

* நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சியில் உள்ள விளையாட்டு அரங்குகளில் பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.  சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* தேசிய மாணவர் படைக்கென தனியாக  பயிற்சி அகாடமி ஒன்று மதுரை மாவட்டம், இடையாப்பட்டியில்
கட்டப்பட்டு வருகின்றது.

* உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு திடல்கள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

* திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

* தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 25 நீச்சல் குளங்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

* வேளச்சேரி நீச்சல் குள வளாகம், ஷெனாய் நகர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

* சமுதாய வளர்ச்சிக்குச் சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, “முதலமைச்சர்
மாநில இளைஞர் விருது” என்ற புதிய விருது உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
* 2005-ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்விக்கான தனிப் பல்கலைக்கழகத்தில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், நூலக அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஆகியவை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

* உதகமண்டலத்தில் “மலை மேலிடப் பயிற்சி மையம்” ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
* வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், சிறப்பு நிலை பளு தூக்கும் பயிற்சி மையத்தினை முதன்மை நிலை பயிற்சி மையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

* தேசிய மற்றும் சர்வதேசஅளவில் நம் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறம்பட செயலாற்ற அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அறிவியல் விளையாட்டு மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

* தேசிய மாணவர் படை, NCC மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள, மதுரை இடையாபட்டியில் உள்ள தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் வாகன ஓட்டுதல் பாவிப்பு, அதாவது, Driving  Simulator, வானூர்தி பாவிப்பு, அதாவது, Flight Simulator மற்றும் ஆயுத பாவிப்பு, அதாவது, Weapon Simulator ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்