முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

வியாழக்கிழமை, 5 மே 2016      தமிழகம்
Image Unavailable

பெருந்துறை : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கான அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச்  செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 4 கிராம் தங்கம் இனி 8 கிராமாக அதாவது ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விவரம் வருமாறு:-

ADMK Election Manifesto - 2016

விலையில்லா கைப்பேசி வழங்கும் திட்டம்:-
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (cellphone) விலையின்றி வழங்கப்படும்.

சமூக நலத் திட்டங்கள்:-
வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச்  செலுத்தும். சமூக நலத்திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.  மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் A வைட்டமின் D மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட (Fortified) ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும். இதனால் ஆவினுக்கு ஏற்படும் இழப்பை அரசே வழங்கும். திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் 10-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயுடன் 4 கிராம் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50,000 ரூபாய் உடன் 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து 1 சவரன் (8 கிராம்) ஆக உயர்த்தி வழங்கப்படும்.  

அங்கன்வாடி மையங்கள் அனைத்துக்கும்  எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு, பிரஷர் குக்கர் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும். புதிய உணவு வகைகள் வழங்கும் சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும். முதியோர் உதவித் தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.   திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் :-
கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அனைவரும் பயனடைவதுடன், தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும்  78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன் :-
கூட்டுறவு வங்கிகளுக்கு  சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 40,000 கோடி அளவிற்கு பயிர்க் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.  உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 20,787 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்  9,164 கோடி ரூபாய் தான். விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும்  திட்டங்கள் செயல்படுத்தப்படும். தரமான விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பண்ணை மகளிர் குழுக்கள் விரிவாக்கப்பட்டு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படும். வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பயறு உற்பத்தியில் தன்னிறைவு எய்தப்படும். பண்ணை எந்திரங்கள் வாங்க மானியம் தொடர்ந்து வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டங்களுக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மானாவாரி விவசாயிகளின் வருமானம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும். மானாவாரி பயிர் சாகுபடியில் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும்.

தரிசு நிலங்கள் சீர்திருத்தப்பட்டு, நீராதார அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயிர் செய்ய வழிவகை காணப்படும். நீடித்த, நிலையான, கரும்பு உற்பத்தித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர் சாகுபடிக்கு தரமான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும். தரமான இடுபொருட்கள் கிடைக்க வழி செய்யும் வகையில் சிறப்பு நோக்க அமைப்பு (Special Purpose Vehicle) ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுழல் நிதி அதிகரிக்கப்பட்டு இதன் சேவை விரிவாக்கப்படும்.
தோட்டக்கலை விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்படும். அச்சு மற்றும் ஆரம் மாதிரி (hub and spoke model)  தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை துறைகள் மூலம் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் விரிவாக்கப்படும்.
வாழை, இளநீர், மாம்பழம், திராட்சை மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கென சிறப்பு வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும். சூரிய சக்தியால் இயங்கும் விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீத மானியம் தொடர்ந்து வழங்கப்படும். 10 ழஞ வரையிலான மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடங்குகள் மற்றும் குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 3,492 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம்   8,120 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள 92 குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.   இவை மேலும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.  இதன் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் பெறுவர்.பருத்தி உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். தென்னை விவசாயிகளின் வருவாய் பெருக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 517 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 50 தென்னை உற்பத்தியாளர் இணையம் பதிவு செய்யப்பட்டுள்ளன; மேலும் 13 தென்னை  உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் நல்ல விலை பெற வழிவகை செய்யப்படும்.

தரமான தென்னை கன்றுகள் விநியோகம் மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தென்னை உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும்.  தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்திக்கான பயிற்சிகள் வழங்கப்படும். வயதான மற்றும் பூச்சி நோய் தாக்குதலுக்கு இலக்கான தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்யும் வகையில் ஒரு புதிய சிறப்பு திட்டம் 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

இயற்கை விவசாயம்  ஊக்கப்படுத்தப்படும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விவசாயிகளுக்கு தொடர்ந்து கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர விவசாயப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயுத் திட்டம்,  ஷேல் எரிவாயுத் திட்டம் போன்ற விவசாயிகளை பாதிக்கக் கூடிய எந்த திட்டமும் அனுமதிக்கப்படமாட்டாது. விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படமாட்டாது. மேம்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் கணினிமயமாக்கப்பட்டு மின்னணு ஏலமுறை (e-Tender) இணையதள வசதிகள் ஏற்படுத்தப்படும்.  விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் குறித்த ‘குறுஞ்செய்தி’ சேவை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், நுகர்வோரின் தேவையின் அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள உரிய முன் பின் இணைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.  இதற்காக எளிதில் வீணாகும் தன்மை கொண்ட காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குளிர்சாதன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும். சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவருக்கும் உடல் நலம் :-
புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் தேவைக்கேற்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும். 24 மணி நேரமும் செயல்படும் 42 தாய் சேய் நல மையங்கள் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்; அம்மா மகப்பேறு சஞ்சீவி, சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்; அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும்  விரிவுபடுத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில்  5 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு முறை தொடர்ந்து எதிர்க்கப்படும்.முதியோர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரி மருவத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.108 ஆம்புலன்ஸ் திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும்.நல்வாழ்வுக் குறியீடுகளில் மேலும் மேன்மையடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுவர், சிறுமியர்களுக்கு அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூலமாக வைட்டமின் ‘C’ மாத்திரை வழங்கப்படும்.

அம்மா பேங்கிங் கார்டு :-
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் Amma Banking Card வழங்கப்படும்.  வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.  நிதிச் சேவையை உறுதிபடுத்தும் வகையிலும், அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் வகையிலும், 1,000 ரூபாய் வரை  சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.  வாரம் 10 ரூபாய் என்ற அளவிற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய அளவில் இந்தக் கடன் அமையும்.  Amma Banking Card-ஐ பயன்படுத்தி அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளை செய்வதோடு, அனைத்து கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் அரசின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பயன்படுத்தும் விதமாக இந்த Amma Banking Card சேவை வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப சேவைகள் :-
அனைத்து அரசுத் துறை சேவைகளும் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் மாவட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 57 அரசு சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  அனைத்து அரசு சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும்.  மேலும் தற்போது சில அரசு சேவைகள் கைபேசி வாயிலாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இது அனைத்து அரசு சேவைகளுக்கும் செயல்படுத்தப்படும்.

அரசு இ-சேவை மையங்கள் மூலம் அனைத்து அரசு சேவைகள் மற்றும் இதர சேவைகள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற ஏழ்மை குறைப்புக் குழுக்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலம்  10,034 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 57 அரசு சேவைகள் இம்மையங்களின் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.25 கோடி பேர் இதனை பயன்படுத்தியுள்ளனர்.  அனைத்து அரசு சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும்.

மேக கணினிய (Cloud Computing) செயல்பாடு மேம்படுத்தப்படும். மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கான மேக கணினி சார்ந்த சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். இல்லந்தோறும் இணையம் என்னும் சேவை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு செம்மைப்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு ‘Set-top Box’ விலையின்றி வழங்கப்படும்.

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்  குறைந்த கட்டணத்தில் தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படும். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 70 லட்சத்திற்கும் மேலான சந்தாதாரர்களுக்கு  மாதம்  70 ரூபாய் என்ற குறைந்த விலையில் கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது.  டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று டிஜிட்டல் ஒளிபரப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட முக்கிய அம்சங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மேற்கண்ட அறிவிப்புகளை பொதுக்கூட்டத்தில் வெளியிட்ட போது, அங்கு திரண்டிருந்த பெண்களும், ஆண்களும் பலமாக கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்