முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை வாசி உயர்வுக்கு காரணமே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான்: முதல்வர் ஜெயலலிதா பதிலடி

வியாழக்கிழமை, 5 மே 2016      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோலிய பொருட்களின் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தலாம் என்ற கொள்கை முடிவை முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணி மேற்கொண்டது. விலை உயர்விலிருந்து மக்களை பாதிப்படையாமல் பாதுகாத்தது அதிமுக அரசு என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றம் மற்றும் புதுவை மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா பேசியதாவது:-

வாக்காளப் பெருமக்களே, விலைவாசி உயர்ந்துள்ளது என்றும், இதற்கு அ.தி.மு.க அரசு தான் காரணம் என்பது போலவும், ஒரு பொய் பிரச்சாரத்தை கருணாநிதியும், திமுக-வினரும் மேற்கொண்டு வருகின்றனர். அகில இந்திய அளவில் பொருட்களின் தேவை மற்றும் அவை கிடைக்கும் அளவு, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை என பல்வேறு காரணங்களால் விலை உயர்வு ஏற்படுகிறது.

இந்த கொள்கைகளில் எதையுமே மாநில அரசு நிர்ணயம் செய்ய இயலாது. இந்த கொள்கைகளையெல்லாம் வகுப்பது மத்திய அரசு தான். எனவே தான், விலைவாசி என்பது அகில இந்திய அளவிலும் கிட்டதட்ட ஒரே அளவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், விலைவாசி ஏற்றத்திலிருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும். அது போன்ற திட்டங்கள் இங்கே தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தி வருவதால் தான், விலைவாசியின் தாக்கம் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்காமல் இருக்கிறது.

உர விலையை ஏற்றியது திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு தான். இதற்கு மத்திய அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்தது திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தான். ஆனால், இதில் மாநில அரசு என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து எனது தலைமையிலான அதிமுக அரசு உரத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது. சமையல் எரிவாயுவிற்கான விலையை திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் உயர்த்தி வந்தது. இதை மாநில அரசால் கட்டுப்படுத்த இயலாது.

ஆனால், எனது தலைமையிலான அதிமுக அரசு எரிவாயு சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரியை முழுவதுமாக ரத்து செய்தது. பெட்ரோல், டீசல் ஆகிய பொருட்களின் விலை உயர்ந்தால் போக்குவரத்து செலவு அதிகமாகும். அதன் காரணமாக பொருட்களின் விலை உயரும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலையை  எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தது திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசு. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தின் தவறான கொள்கையைத் தான் தற்போதைய பாரதிய ஜனதா அரசும் கடைபிடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் மத்திய கலால் வரியை உயர்த்தி விட்டது.

தற்போதைய மத்திய பாரதிய ஜனதா அரசு. டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாய் 57 காசு எனவும், பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 77 காசு எனவும் மத்திய கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது. பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் விற்பனை வரியை உயர்த்தியுள்ளன. ஆனால், எனது தலைமையிலான அதிமுக அரசு விற்பனை வரியை உயர்த்தவே இல்லை. அதே போல, டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணங்களை அதிமுக அரசு உயர்த்தாமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக 1,556 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மட்டும் அல்லாமல் விலைவாசி உயர்விலிருந்து பொதுமக்களை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அதிமுக  அரசு எடுத்து வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றிற்கு 20 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. வெளிச் சந்தையில், அரிசியின் விலை உயர்ந்த போது கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என மிகக் குறைந்த விலையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. காய்கறி விலையைக் கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வெளிச் சந்தையில் பருப்பு வகைகள், மிளகாய், புளி போன்றவை விலை உயர்ந்த போது அவற்றை குறைந்த விலையில் அரசு விற்பனை செய்தது. அதனால் வெளிச் சந்தை விலை குறைந்தது. விலைவாசியில் இருந்து ஏழை எளியோரை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் மூலம் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் மினரல் வாட்டர் என்னும் குடிநீர் கிடைத்திடும் வகையில் அம்மா குடிநீர்' பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய்  என்ற விலையில் விற்கப்படுகிறது.

மருந்துப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஏதுவாக அம்மா மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்கப்படும் மருந்துகள் 15 சதவீத அளவிற்கு விலை குறைவாகும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை பராமரிப்புச் செய்வதற்கும் ஏதுவாக, மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சியில் விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்