முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் அரசு உதவி : லோக்சபாவில் பாரிக்கர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  ஊழல் நடந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தத்தை பெற அனைத்து உதவிகளையும் அளித்தது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார். அவர் லோக்சபையில் சில ஆவணங்களை காட்டி காங்கிரஸ் தலைமையிலான அரசு ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்கு உதவிய விவரங்களை அவர் காட்டினார்.

இத்தாலியில் பின் மெக்கானிக்கா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தில் இருந்து ரூ 3ஆயிரத்து 600கோடிக்கு ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்திய தலைவர்களுக்கு லஞ்சம் அளித்த தகவல் இத்தாலி கோர்ட் வழக்கு விசாரணை ஒன்றில் தெரிய வந்தது.

இந்த லஞ்ச விவகாரம் இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக காங்கிரஸ் அரசை தற்போதை மத்திய அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. லோக்சபாவில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போதுதான் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி மற்றும் கவுதம் கைத்தான் ஆகியோர் ஊழல் நதியில் தங்கள் கைகளை மிக சுலபமாக கழுவிகொண்டுள்ளனர்.

அந்த ஊழல் நதி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் கடந்த 2010ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தியாகி கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார்.  அகஸ்டா வெஸ்ட் ஊழல் குறித்து சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த ஒப்பந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது.  இந்த ஊழல் விவகாரம் கடந்த 2012ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014ம் ஆண்டு வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின் மெக்கானிக்காவின் தலைமை அதிகாரி லஞ்ச விவகாரத்தில் இத்தாலியில் கைது செய்யப்பட்டார்.அதன் பின்னரே அப்போதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி சி.பி.ஐ.யிடம் உரிய ஆவணங்களை அளித்தார். அவர் தனது புகழை பாதுகாத்துகொள்ள இவ்வாறு அவர் செய்தார்.காங்கிரஸ் தலைமையிலான அரசின் போதுதான் ஆயுத ஊழல்கள் நடந்துள்ளன. தற்போதைய அரசில் அதைப்போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் நடக்க வில்லை என்று பெருமிதத்துடன் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்