முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் : ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - நீங்கள் தான் என் மூச்சுக் காற்று, உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தனது தொகுதியான ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக சென்று வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது சென்ற இடமெல்லாம் சாலையின் இருபுறத்திலும் மக்கள் வெள்ளமென திரண்டு அவரை வரவேற்றனர். பலர் மலர்தூவி முதல்வரை வரவேற்றனர். அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்தபடி சென்றார்.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று, தான் போட்டியிடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதியில், சூரிய நாராயண செட்டி தெரு - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு என்ற இடத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், என்னை நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள்.  இத்தொகுதி மக்கள் எனது நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள். 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், இந்தத் தொகுதியில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மீண்டும் போட்டியிடுகிறேன்.  உங்களை சந்தித்து எப்போதும் போல உங்களது பேராதரவை எனக்கு அளித்து, என்னை மீண்டும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளவே நான் இங்கே வந்துள்ளேன்.

உங்களது பேராதரவுடன் 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற, எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு, கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலன் காக்கும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பல வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம்.  மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணாக்கர்கள், இளைஞர்கள், மகளிர், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முதியோர்கள் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் தேவையானவற்றை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்து கொடுத்துள்ளது. 

ஏழை, எளியோரை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் ஆட்சி பொறுப்பேற்ற போது பல மணி நேரம் மின்வெட்டு என்ற நிலை இருந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  மின்வெட்டினால் எவ்வளவு கஷ்டங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் என்பதை மறக்கவே முடியாது.  அந்த நிலை இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இப்பொழுது, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.  சட்டம்-ஒழுங்கு செம்மையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  சென்னை, காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.  அனைத்து நவீன வசதிகளும் இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

கத்திவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் காக்ரேன் பேசின் சாலை ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டை பகுதி மக்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.  வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே, நேரு நகர் மற்றும் எழில் நகர் ஆகியவற்றை இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  பவர் குப்பம் பகுதியில் சிதிலமடைந்த குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, 556 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இங்குள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரங்கநாதபுரம் திட்டப் பகுதியில் 480 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு இங்கு உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

சின்ன ஸ்டான்லி மருத்துவமனை என அழைக்கப்படும் தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி வழங்கப்பட்டுள்ளது.   அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.  புதிய நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி மக்களின் வசதிக்காக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த 28.2.2016 அன்று நான் கலந்து கொண்ட அரசு விழாவில், பல்வேறு பணிகள் 193 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றிட அடிக்கல் நாட்டினேன்.  இந்தப் பணிகள் எல்லாம் விரைவில் முடிக்கப்படும். இந்தத் தொகுதியில் 30,593 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  306 உட்புறச் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

முந்தைய தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த தொகுதியில் வெறும் 43 லட்சம் ரூபாய்க்கான குடிநீர்ப் பணிகளும், 50 லட்சம் ரூபாய்க்கான கழிவுநீர்ப் பணிகளும் தான் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 6 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர்ப் பணிகள் மற்றும் 17 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுநீர் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பெருநகர சென்னை  மாநகராட்சி மூலம் கட்டடங்கள், பாலங்கள், சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், பூங்காக்கள் போன்ற 1,824 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு சில நாட்களில் கொட்டித் தீர்த்தது.

  சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.  இந்தத் தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது, நான் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, தேவையான உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உங்களையெல்லாம் நேரில் வந்து சந்தித்து, உங்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன் என்பதை எடுத்துக் கூறினேன்.   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்தது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 97,411 குடும்பங்களுக்கு  48 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளப்  பெருமக்களே, எவ்வளவு பெருமழை பெய்தாலும் வெள்ளம் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்கிறேன்.  உங்கள் ஆதரவுடன் எனது தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் என்ற உறுதிமொழியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

* மீன்பிடி தடைக்கால நிவாரணத் திட்டம் மற்றும் மீன்பிடி குறைந்த காலத்திற்கான நிவாரண திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.  மீனவர்களுக்கென தனி வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவதுடன், கட்டணமில்லாமல் இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும்.
* கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* 100 யூனிட் மின்சாரத்திற்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
* ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் திருநாளுக்கு 500 ரூபாய் மதிப்பிலான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறும் வகையில் வெகுமதி கூப்பன்கள் Gift கூப்பன்கள் வழங்கப்படும். 
* அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு செட் டாப் பாக்ஸ் விலையில்லாமல் வழங்கப்படும்.
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
* திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் என்பதற்குப் பதிலாக, 1 சவரன், அதாவது 8 கிராம் தங்கம் வழங்கப்படும்.
* பெண்கள் மொபெட், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலை இல்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.
* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் ஹ, வைட்டமின் னு மற்றும் இரும்புச் சத்துகள் செறிவூட்டப்பட்ட பால் ஆவின் மூலம் 1 லிட்டர் 25 ரூபாய் என்ற குறைந்த விலையில் விற்கப்படும்.
* அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும்.  இதன் மூலம், வட்டியில்லாமல் வாரம் 10 ரூபாய் சுலபத் தவணையில் திருப்பிச் செலுத்தும்படி 1,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.  அரசின் எல்லா சேவைகளுக்கும் இந்த அம்மா பேங்கிங் கார்டை பயன்படுத்த முடியும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, மக்களால் நான், மக்களுக்காகவே நான்.  உங்களால் நான்,  உங்களுக்காகவே நான்.  என் மீது உங்களுக்கு நம்பிக்கை! உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை! தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல,சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க, இடைத் தேர்தலில் என்னை எப்படி வெற்றி பெற வைத்தீர்களோ அதை விட மகத்தான வெற்றியை நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம்  ``இரட்டை இலை'' சின்னத்தில் வாக்களித்து, என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்