முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டு போட பணம் வாங்க மாட்டோம் என்று 10-ம் தேதி 1 கோடி பேர் உறுதி ஏற்கிறார்கள் : தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஒட்டு  போட பணம் வாங்க மாட்டோம், பணம் கொடுப்போரை பிடித்து கொடுப்போம் என்று வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்பார்கள் என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஒட்டு போட பணம்  வாங்க மாட்டோம், பணம் கொடுப்போரை பிடித்துக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஒரு கோடி பேர் ஏற்கவுள்ளனர்.
66 ஆயிரம் வாக்குச் சாவடிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். வரும் 10-ம் தேதியன்று காலை 10 மணிக்கு உறுதிமொழி ஏற்கப்படும்.
வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குகளை எண்ணும் பணிக்காக 68 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.

கடந்த சில நாள்களில் மட்டும், அரியலூர், திருவாரூர் மட்டும் ரூ.40 லட்சத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 84 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற வகையில், இப்போது கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் 94 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்களது தொகுதிகள் அனைத்தும் செலவுகள் அதிகமாக செலவிடப்படும் தொகுதிகளாக கருதப்பட்டு அங்கு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுவார்.

இந்தத் தொகுதிகளில் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கப்படும். பறக்கும் படைகளில் முழுக்க முழக்க  துணை ராணுவப் படையினரே ஈடுபடுத்தப்படுவர். மேலும், இரவு நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க, வாக்குப் பதிவுக்கு முந்தைய மூன்று தினங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் போன்றவை  கணினிமயமாக்கப்படவில்லை. எனவே, அந்த வங்கிகளில் உள்ள வர்த்தக பரிமாற்றங்கள் கண்காணிக்கப்பட உள்ளது.
செல்போன்களில்  டாப்-அப் செய்யப்படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 16 கோடி செல்லிடப்பேசி இணைப்புகள் உள்ளன. கடந்த 3 மாதங்களுக்குள் 50 லட்சம் டாப்-அப்கள் செய்யப்பட்டுள்ளன. ரூ.500-க்கு மேல் அதிக பணத்துக்கு டாப்-அப் செய்தால் அவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். மேலும், அட்டைகள், இணையதளம், முகவரின் கணினி ஆகிய மூன்று முறைகள் மூலம் டாப்-அப் செய்யப்படுகின்றன. இதில், இணையதளம் வழியாகச் செய்யப்படும் டாப்-அப்களே அதிகம் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றார் ராஜேஷ் லக்கானி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்