முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 10 மே 2016      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும்.

9-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் அதிரடி வீரர் கெய்ல் இடம்பெறவில்லை. பர்வேஸ் ரசூல் நீக்கப்பட்டு இக்பாப் அப்துல்லா சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், குர்கீரத்சிங்குக்கு பதிலாக பெஹர்டைன், அனுரீத்சிங் ஆகியோர் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் எம்.விஜய் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் கண்டனர். லோகேஷ் ராகுல் ஆட்டத்தில் அதிரடி மிளிர்ந்தது. 4-வது ஓவரில் ஸ்டோனிஸ் பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். 5.1 ஓவர்களில் பெங்களூரு அணி 50 ரன்னை எட்டியது.

அணியின் ஸ்கோர் 63 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய லோகேஷ் ராகுல் (42 ரன்கள், 25 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கரியப்பாவின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். அதே ஓவரில் கேப்டன் விராட்கோலி (20 ரன்கள், 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் இறங்கிய ஷேன் வாட்சன் (1 ரன்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். 8 பந்துகளில் 3 விக்கெட்டுகள் சரிந்தன.

இதைத்தொடந்து சச்சின் பேபி, டிவில்லியர்சுடன் இணைந்தார். டிவில்லியர்ஸ் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி வேகமாக ரன் சேர்த்தார். அபாரமாக ஆடிய டிவில்லியர்ஸ் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கரியப்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.  அடுத்து களம் கண்ட டிராவிஸ் ஹெட் (11 ரன்) கடைசி ஓவரில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் எம்.விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் சச்சின் பேபி (33 ரன்கள், 29 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா தலா 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய எஸ்.ஆர்.வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பஞ்சாப் அணியில் ஹசிம் அம்லா 21 ரன்னிலும், விருத்திமான் சஹா 16 ரன்னிலும், டேவிட் மில்லர் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் எம்.விஜய் 89 ரன்னிலும் (57 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஸ்டோனிஸ் 34 ரன்னுடனும், பெஹெர்டைன் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.பெங்களூரு அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல், ஷேன் வாட்சன் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினார்கள். 9-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணி சந்தித்த 7-வது தோல்வி இது. இந்த தோல்வியால் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.

வெற்றி குறத்து விராட் கோலி கூறுகையில்...
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் இந்த வெற்றியை பெற்று 2 புள்ளிகளை பெற்று இருக்கிறோம். டிவில்லியர்ஸ், ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவரை வீசிய கிறிஸ் ஜோர்டான் தான் பாராட்டுக்குரியவர். கடைசி 2 பந்தை அவர் மிகவும் அபாரமாக வீசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். பஞ்சாப் அணி வீரர் முரளி விஜய் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அவர் மிகவும் அபாரமாக ஆடினார். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முரளிவிஜய் கூறியதாவது:-
இது கிரிக்கெட்டின் மிகவும் சிறப்பாக ஆட்டமாகும். ஆனால் நாங்கள் கடைசி வரை வெற்றிக்கு போராடினோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு 175 ரன்னுக்குள் கட்டுபடுத்தி விட்டனர். நாங்கள் திட்டமிட்டு பேட்டிங் செய்தோம். ஸ்டோனிசை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அவரும் இறுதி வரை இருந்தார். ஆனால் வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெங்களூர் அணி 10-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை இன்றும், பஞ்சாப் அணி 11–வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 13-ம் தேதியும் சந்திக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்