முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் புனே அணி ‘பிளேஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது

புதன்கிழமை, 11 மே 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம் : 9-வது ஐ.பி.எல் தொடரில் 11 லீக் போட்டியில் விளையாடிய டோனியின் புனே அணி 8-ல் தோல்வியடைந்ததால் ‘பிளேஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதன் மூலம் எஞ்சிய 3 லீக் போட்டிகளுடன் அந்த அணி வெளியேறுகிறது.

டோனியின் புனே அணி 4 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்றது. இதன்மூலம் 8-வது தோல்வியை தழுவிய அந்த அணி வெளியேற்றப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுத்தது. தவான் 27 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம்சன் 32 ரன்னும் எடுத்தனர். ஆடம் ஜம்பா 6 விக்கெட்டும், ஆர்.பி.சிங், அஸ்வின் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ரைசிங் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் புனே அணி 4 ரன்னில் தோற்றது. பெய்லி அதிகபட்சமாக 34 ரன்னும், கேப்டன் டோனி 20 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நெக்ரா 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார், பரீந்தர் ஸ்ரன், ஹென்ரிக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். புனே அணி சந்தித்த 8–வது தோல்வியாகும்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் புனே அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. டோனியின் ரன்அவுட் திருப்பு முனையானது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் புனே அணியின் வெற்றிக்கு 14 ரன் தேவை. கைவசம் 5 விக்கெட் இருந்தது. நெக்ரா வீசிய அந்த ஓவரில் முதல் 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் பெரைரா ‘அவுட்’ ஆனார். 4-வது பந்தில் டோனி சிக்சர் அடித்தார். கடைசி 2 பந்தில் 6 ரன் தேவை. 5-வது பந்தில் டோனி ‘ரன்அவுட்’ ஆனார். அதோடு அணியின் வாய்ப்பு முடிந்தது. ஒரு ரன் எடுத்துவிட்டு 2-வது ரன்னுக்கு ஓடி வந்தபோது ரன்அவுட் ஆனார். கடைசி பந்தில் 5 ரன் தேவை. இதில் ஆடம் ஜம்பா ஆட்டம் இழந்தார். இதனால் 4 ரன்னில் ஐதராபாத் வெற்றி பெற்றது.

டோனி தலைமையிலான புனே அணி 11 ஆட்டத்தில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 8 போட்டியில் தோற்று 6 புள்ளியுடன் இருக்கிறது. இந்த தோல்வி மூலம் அந்த அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. புனே அணி ‘பிளேஆப்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டம் எஞ்சியுள்ளது. மூன்றிலும் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.

புனே அணி குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளிடம் தலா 2 முறையும், பஞ்சாப், கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் அணிகளிடம் தலா 1 முறையும் தோற்றன. மும்பை, ஐதராபாத், டெல்லி அணிகளை வீழ்த்தி இருந்தது. அந்த அணி 12–வது ‘லீக்’ ஆட்டத்தில் கொல்கத்தாவை 14-ம் தேதி சந்திக்கிறது.

வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி பெற்ற 7–வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அந்த அணி 11–வது ஆட்டத்தில் டெல்லியை இன்று எதிர்கொள்கிறது. தற்போது உள்ள புள்ளி விவரப்படி ஐதராபாத், குஜராத் அணிகள் ‘பிளேஆப்ஸ்’ சுற்றில் நுழைவது உறுதியாகிவிட்டது. இரு அணிகளும் ஒரே ஒரு வெற்றி பெற்றால் போதுமானது. மற்ற 2 அணிகளுக்கான போட்டியில் கொல்கத்தா, டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய 4 அணிகள் உள்ளன. புனே அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. பஞ்சாப் அணியும் வாய்ப்பை இழக்கும் நிலையில் தான் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்