முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி

வியாழக்கிழமை, 12 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மும்பை அணிக்கு 6-வது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் 4–வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். தற்போதுள்ள சூழ்நிலையில் டோனி தலைமையிலான புனே அணி 8 போட்டிகளில் கண்ட தோல்வியால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையை இழந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு கடந்த அதிரடி வீரர் கெய்ல் இடம் பிடித்தார். இக்பால் அப்துல்லாவுக்கு பதிலாக ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் நிதிஷ் ராணா இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, கெய்ல் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிம் சவுதி பந்து வீச்சில் விராட்கோலி சிக்சர் தூக்கினார். அடுத்த ஓவரில் மெக்லெனஹானின் முதல் பந்தில் விராட்கோலி (7 ரன்கள், 7 பந்துகளில் ஒரு சிக்சருடன்) விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கெய்ல், அணியின் ஸ்கோர் 17 ரன்னாக இருந்த போது (5 ரன், 6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். டிம் சவுதி பந்து வீச்சில் பவுண்டரி அடித்த கெய்ல் அடுத்த பந்தையும் அடித்து ஆடினார். அது பவுண்டரி எல்லை அருகில் ரோகித் சர்மா கையில் தஞ்சம் அடைந்தது.

இதனை அடுத்து லோகேஷ் ராகுல், டிவில்லியர்சுடன் இணைந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்) பெங்களூரு அணி 25 ரன்னே எடுத்தது. டிவில்லியர்ஸ், குணால் பாண்ட்யா வீசிய பந்தை அடித்து ஆட அது மேல் நோக்கி எழும்பி அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் ஆனது. டிவில்லியர்ஸ் 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட ஷேன் வாட்சன் (15 ரன்கள்) ரோகித் சர்மாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதைத்தொடந்து சச்சின் பேபி, லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். முக்கிய விக்கெட்டுகள் சரிந்தாலும் இருவரும் அச்சமின்றி அதிரடியாக அடித்து ஆடினார்கள். 15.4 ஓவர்களில் பெங்களூரு அணி 100 ரன்னை எட்டியது. அவ்வப்போது சிக்சர் பறக்க விட்ட இருவரும் வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்கள். பொல்லார்ட் வீசிய 18-வது ஓவரில் 23 ரன்கள் திரட்டினார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்னும், சச்சின் பேபி 13 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் டிம் சவுதி, மெக்லெனஹான், குணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். 4 ஓவர்கள் வீசிய குணால் பாண்ட்யா 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவரது பந்து வீச்சில் இந்த ஆட்டத்தில் யாரும் பவுண்டரி, சிக்சர் அடிக்க முடியவில்லை.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் (1 ரன்), கேப்டன் ரோகித் சர்மா (25 ரன்கள், 24 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), நிதிஷ் ராணா (9 ரன்), அம்பத்தி ராயுடு (44 ரன்கள், 47 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். பொல்லார்ட் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 35 ரன்னும், ஜோஸ்பட்லர் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பெங்களூரு அணி தரப்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்டும், யுஸ்வேந்திர சாஹஸ், ஸ்ரீநாத் அரவிந்த் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். 10-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு அணி சந்தித்த 6-வது தோல்வி இது. மும்பை வீரர் பாண்ட்யாவுக்கு ஆட்டநாயகன் விருத வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago