முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க படைகளின் வான்வழி தாக்குதலில் தாலீபான் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் ஒபாமா

திங்கட்கிழமை, 23 மே 2016      உலகம்
Image Unavailable

ஹனோய்  - அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் தாலீபான் தலைவர்  முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். ஆப்கானிஸ்தானின் அமைதி நிலவ மேற்கொண்டு இருக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான மைல்கல் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா மன்சூர் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஆப்கான் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்க படைகள் மற்றும் அதன் கூட்டுப்படைகளுக்கு எதிராக சதி செய்து  தொடர்ந்து தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட அமைப்பின் தலைவரை நாம் நீக்கியுள்ளோம் என்று கூறினார். தற்போது வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஒபாமா மேலும் கூறுகையில், அமைதிப்பேச்சுவார்த்தையை மன்சூர் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், இதனால், அப்பாவி ஆப்கான் மக்கள் கணக்கில் அடங்காத வகையில் கொல்லப்பட்டனர் என்றும் அடுத்து வரப்போகும் தாலீபான் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர இதுதான் உண்மையான பாதையாக இருக்கும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் முல்லா உமர். இவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் தலைவராக, அவரது உதவியாளராக இருந்த முல்லா அக்தர் மன்சூர் (வயது 48), கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.முல்லா அக்தர் மன்சூர் பதவிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் படை வீரர்களும் ஏராளமாக கொல்லப்பட்டனர். அது மட்டுமல்ல, அமெரிக்க கூட்டுப்படை வீரர்களும், தலீபான்கள் தாக்குதல்களில் உயிரிழக்க நேரிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அகமது வால் என்ற இடத்தில் முல்லா அக்தர் மன்சூரை குறி வைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வான் வழி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அவரும், அவருடன் காரில் பயணம் செய்த மற்றொருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்ட தகவலை தலீபான் தீவிரவாத வட்டார தகவல்களும் உறுதிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்