முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்: 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்

திங்கட்கிழமை, 23 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, 6–வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் மத்திய அரசின் சார்பாக மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ. தி.மு.க. 134 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 1984–ம் ஆண்டுக்குப்பின் அதாவது 32 ஆண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியாக ஒரு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அப்படியொரு வரலாற்று சாதனை நிகழ்த்தி ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். மக்களின் அமோக ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்ற ஜெயலலிதா மக்களின் பலத்த கரவொலி வாழ்த்துக்கிடையே 6–வது முறையாக முதல்வராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி சென்னை கடற்கரை சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

28 அமைச்சர்களும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்த பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியேயும், கடற்கரை சாலை நெடுகிலும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.

முன்னதாக பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை 11–40 மணிக்கு தனது போயஸ் இல்ல தோட்டத்திலிருந்து புறப்பட்டார். 11–50 மணிக்கு விழா மண்டபம் வந்தார். அவருக்கு அரங்கம் அதிர வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்கள் புரட்சித்தலைவி அம்மா வாழ்க என்று வாழ்த்து முழக்கம் எழுப்பி முதல்வரை வரவேற்றனர். முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைமை செயலாளர் ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேடையில் நின்று அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி அவர்களது வரவேற்பை முதல்வர் ஜெயலலிதா பெற்றுக் கொண்டு மேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். பின்னர் மேடையில் அவரவர் இருக்கைகளில் பதவி ஏற்க இருந்த அமைச்சர்கள் அமர்ந்தனர்.   பகல்  12 மணிக்கு கவர்னர் ரோசய்யா மண்டபம் வந்தடைந்தார். 12–02 மணிக்கு விழா நடக்கும் மேடைக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். கவர்னருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இதன்பின்னர் பதவி ஏற்க இருக்கும் 28 அமைச்சர்களையும் ஒவ்வொருவராக கவர்னருக்கு ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். ஒவ்வொருவரும் கவர்னருக்கு வணக்கம் தெரிவித்து  வாழ்த்து பெற்றனர். பின்னர் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சுருக்கமாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைக்குமாறு கவர்னரை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். ஆண்டவன் பெயரில் முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணமும்  எடுத்து கொண்டார். பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் ‘அம்மா வாழ்க’ என்று நீண்டநேரம் வாழ்த்து முழக்கமிட்டு கொண்டிருந்தார்கள்.

பதவி ஏற்ற ஜெயலலிதா தனது இருக்கைக்கு வந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பின் அமைச்சர்கள் 28 பேரும் 2 பிரிவுகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். முதல் பிரிவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் வி.சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகிய 14 பேரும் நின்று பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்டதும் ஒவ்வொரு அமைச்சரும் ஜெயலலிதாவிடம் வந்து ஆசி பெற்று சென்றார்கள். கவர்னரிடமும் கைகுலுக்கி வாழ்த்து பெற்றனர்.

இரண்டாவது பிரிவில் உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், ஆர்.துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கே.சி.வீரமணி, பி.பெஞ்சமின், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் எம்.மணிகண்டன் , எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 14 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.28 அமைச்சர்களும் ஆண்டவன் மீது உறுதி கூறி பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்து கொண்டனர்.

அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டவர்களும் ஒவ்வொருவராக முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று ஆசி பெற்றார்கள். கவர்னரிடமும் வந்து வாழ்த்து பெற்றார்கள். 12–22 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தது. இறுதியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. 20 நிமிடத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிவடைந்தது.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னருடன் பதவி ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்களும் குழு (குரூப்) புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டால் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலாகும். ஆனால் இப்போது 2 பிரிவாக அமைச்சர்கள் வரிசையாக நின்று ஒரே நேரத்தில் பதவி ஏற்றுக் கொண்டதால் 17 நிமிடத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவு பெற்றது.

முன்னதாக பதவி ஏற்பு விழா மண்டபம் முக்கிய பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது. இந்த விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர். மண்டபத்திற்கு வெளியேயும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். அவர்கள் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை காண பெரிய எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டிருந்தன. அதனை மக்கள் பார்த்து முதலமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றபோது கைதட்டி வாழ்த்து கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்