முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - இலங்கையில் கேகாலை மாவட்டம் அரநாயக்கா பிரதேசத்தில் பாரிய நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் ஆனநிலையிலும் நிலச்சரிவின் பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் புதையுண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் சுமார் 200 பேரை கொண்ட ராணுவ மீட்புக் குழு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

பேரிடர் நிவாரணமையத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களில், இறந்தவர்களின் எண்ணிக்கை 40 என்றும் , காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 104 என்றும் கூறப்பட்டுள்ளது. காணாமல் போனதாக கூறப்படும் 104 பேரும் நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என உறவினர்களால் அஞ்சப்படுகிறது. ஒரு குழந்தை , 6 பெண்கள் மற்றும் 17 ஆண்கள் என 24 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை தவிர 16 பேருடையது என கருதப்படும் சில உடற்பாகங்களும் மீட்கப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.

அதே வேளை, மழை வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகின்றன. மழை வெள்ளம் தற்போது குறைந்து வரும் நிலையில் கணிசமான குடும்பங்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி, துப்பரவு செய்யும் பணிகளிலும், தங்களது பொருட்களை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் கடும் பாதிப்புக்குள்ளான கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளம் வடிந்துள்ள போதிலும், தற்போதைக்கு அக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க முடியாத நிலையே காணப்படுகிறது .

இதன் காரணமாக, அக்குடும்பங்கள் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து தற்காலிக இடங்களிலே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பேரிடர் நிவாரண அமைச்சகம் நேற்றுவெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 107 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான பகுதிகள் உயர் பாதுகாப்பு பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தங்களுக்குள்ளான பகுதிகளில் நடைபெறக்கூடிய திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள் கொழும்பு மாவட்டத்தில் நேற்றுமுதல், தாழ் நிலங்களில் மண் நிரப்பி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்