முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில்  10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்    இன்று காலை வெளியாகிறது.   தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில   பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ம் தேதி துவங்கி  ஏப்ரல் 13 ம் தேதி வரையும் நடைபெற்றது.   

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 12 ஆயிரத்து 53  பள்ளிகளில் இருந்து 10    லட்சத்து 51 ஆயிரத்து 301  மாணவர்களும் தேர்வு எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, தற்பொழுது மதிப்பெண் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிட்பபட்டு, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரதேவி  தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அறிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  . 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 15 ம் தேதி முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான முடிவுகள் இன்று  காலை 9.31 மணி முதல் 10 மணிக்குள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம் வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.  மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய, கிளை நூலகங்களில் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தெரிந்துகொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், அன்றைய தினமே மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மறுகூட்டலுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய இன்று முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு ரூ. 205-ம் மறுகூட்டலுக்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை, மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்