முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்கிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு துவங்குகிறது. அப்போது, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் ஜூன் 3–ந்தேதி நடைபெறுகிறது.

தமிழக சட்டசபைக்கு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர மீதி உள்ள 232 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அ தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா 6வது முறையாக பதவி ஏற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள்.

இதனையடுத்து கவர்னர் மாளிகையில் செம்மலை தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றார். இந்நிலையில், 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. சபையில் தற்காலிக சபாநாயகர் செம்மலை நடத்துவார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி எடுத்து கொள்கிறார்கள். இது குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக கவர்னர் ரோசய்யா, 15–-வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதற்கூட்டத்தை, 2016–ம் ஆண்டு மே மாதம் 25–ம் நாள், புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார். அவ்வமயம், இந்திய அரசியலமைப்பின் கீழ், உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது சட்டமன்றப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தவைருக்கான தேர்தல் 2016-–ம் ஆண்டு ஜூன் மாதம் 3–ம் நாள், வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இவ்வாறு செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்