முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தாண்டு மட்டும் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக இந்த ஆண்டு நடக்க இருந்த பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் நுழைவு தேர்வு கிடையாது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பிநட்டா விளக்கம் அளித்ததையடுத்து இந்த அவசரச்சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய கல்வி வாரியம் நுழைவு தேர்வு நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அல்லாது மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களில் நடத்தப்படும் நுழைவு தேர்வு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த நுழைவு தேர்வு சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவு த்தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கில் “விருப்பப்படும் மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவு தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாம். அவர்கள் தனியாக நுழைவு தேர்வு நடத்த அனுமதிக்கலாம்” என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இதனை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. இந்த ஆண்டே பொது நுழைவு தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். நுழைவு தேர்வு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என பல மாநில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என நட்டா உறுதி அளித்தார். இதற்கிடையில் பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்க அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த வாரம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவ பொது நுழைவு தேர்வை ஒரு ஆண்டு தள்ளி வைக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான அவசர சட்டம் என்பதால் உடனடியாக அதில் கையெழுத்திட பிரணாப் மறுத்துவிட்டார். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மத்திய சுகாதாரதுறை அமைச்சர் நட்டா பிரணாப்பை சந்தித்து விளக்கம் அளித்தார். அவசர சட்டத்துக்கான காரணங்களை அவர் விளக்கினார். இதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கு மட்டும் மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  கையெழுத்திட்டார். இந்த அவசர சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் கவுன்சலிங் அடிப்படையில் மட்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்