முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை எதிர்காலத்திலும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய “தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை” எதிர்காலத்திலும் அமல்படுத்தும்படி நிர்பந்தம் செய்யக்கூடாது. தமிழகத்தில் இப்போதுள்ள தெளிவான முறையே தொடர வேண்டும். அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக்கோரி முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிராமப்புற எளிய மாணவர்கள் சமஅளவில் பயன்பெறும் வகையில், தமது அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை புகுத்துவது மாநில அரசுகளின் சமூக, பொருளாதார கொள்கைகளில் மட்டுமின்றி, அதற்கான நோக்கங்களிலும் தலையிடும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான  நுழைவு தேர்வை இந்த ஆண்டு மட்டும் ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த ஆண்டு தமிழகத்தில் நுழைவு தேர்வு நடக்காது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்புக்கான விண்ணப்பமும் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவசர சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமருக்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர்  நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

மருத்துவ பட்டப்படிப்பில் சேர, நடப்பு கல்வியாண்டில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவசர சட்டம் இயற்றியதற்கும், இதற்காக துரிதமாக செயல்பட்டதற்கும் மத்திய அரசுக்கு எனது  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தமும் தற்காலிகமாக நீங்கியுள்ளது. இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்ற ஆவலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற எளிய மாணவ - மாணவிகளின் நலனைக் கருதி, 2005-ம் ஆண்டு மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எனது அரசு ரத்து செய்தது. இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய தகுதி நுழைவு தேர்வை அறிமுகப்படுத்துவது மாநிலங்களில் உரிமையை நேரடியாக பறிப்பது போல் உள்ளது. மேலும் இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு போதுமான பயிற்சி மையங்களோ, பாட சம்பந்தமான விளக்கங்களோ கிடைப்பதற்கு வாய்ப்படில்லை. மேலும் இந்த நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது சமூக நீதிக்கு எதிரான செயலாகும். எனவே தமிழகத்தில், மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கு தற்போது உள்ள முறையையே பின்பற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எதிர்காலத்திலும் இந்த நுழைவு தேர்வை அமுல்படுத்தும்படி நிபர்ந்தம் செய்ய கூடாது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago