முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இப்ராகிம் போன் விவகாரம்: புதிய தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை : மும்பை போலீஸ் கமிஷ்னர் தகவல்

புதன்கிழமை, 25 மே 2016      இந்தியா
Image Unavailable

மும்பை -   தாவூத் இப்ராகிம் மகாராஷ்டிர அமைச்சர் இடையே போனில் உரையாடல் நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் இவ்வழக்கு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புதிய தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று மும்பை போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இந்திய அரசியல் தலைவர்களுக்கு  தொலைபேசி அழைப்பு வந்துள்ளது என கடந்த மாதம் ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டது. முக்கியமான அரசியல் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவரது எண்ணிற்கும் தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது என்றும் குறிப்பிட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் தாவூத் இப்ராகிம் வீட்டின் தரைவழி போன் இணைப்பில் இருந்து மகாராஷ்டிரா வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் கட்சேயின் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்ததாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரீத்தி சர்மா சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று அமைச்சர் ஏக்நாத் கட்சே மறுப்பு தெரிவித்தார்.  ஏக்நாத் கட்சேயின் நேர்முக உதவியாளர் கஜாணன் பாட்டீல் ரூ.30 கோடி லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் அதுல்சந்திர குல்கர்னி பேசுகையில்,

மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் கட்சேக்கு தாவூத் இப்ராகிமிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாக கூறப்பட்டது பற்றி விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் ஏக்நாத் கட்சேயின் செல்போன் நம்பருக்கு வந்த போன் அழைப்பு பற்றி ஆய்வு செய்தோம். ஆனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர் குறிப்பிட்டது போல சம்பந்தப்பட்ட நம்பரில் இருந்து 2015 செப்டம்பர் முதல் கடந்த ஏப்ரல் வரை எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. அதேபோல அமைச்சரின் செல்போன் நம்பரில் இருந்தும் பேசப்படவில்லை. தாவூத் இப்ராகிம் மற்றும் அமைச்சர் ஏக்நாத் கட்சே இடையே போனில் உரையாடல் நடந்ததற்கான ஆதரம் எதுவும் போலீஸ் விசாரணையில் கிடைக்கவில்லை என்று கூறினார்.

2015 செப்டம்பர் 4-ம் தேதி முதல், 2016 ஏப்ரல் 5-ம் தேதி வரையில் குறிப்பிட்ட நம்பருக்கு அமைச்சரின் தொலைபேசியில் இருந்து அழைப்பு செல்லவும் இல்லை, அந்த எண்ணில் இருந்து அழைப்பு வரவுமில்லை. இருப்பினும் இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து எங்களுக்கு கிடைத்த புதிய தகவல்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் கமிஷ்னர் தெரிவித்து உள்ளார். இருப்பினும் புதிய தகவல்கள் குறித்த முழுவிபரங்களை அவர் முழுமையாக தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்