முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் - முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக பதவியேற்பு

புதன்கிழமை, 25 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : 15-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலி, வாழ்த்துக்களுடன் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ. தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 32 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தொடர்ச்சியாக 2–வது முறையாக ஆட்சியை பிடித்தது இப்போதுதான். அந்த வரலாற்று சாதனையை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி இருக்கிறார்.

6–வது முறையாக முதல்வராக பதவி ஏற்றும் ஜெயலலிதா சாதனை புரிந்திருக்கிறார். கடந்த 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்டார். கவர்னர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முதல்வருடன் 28 அமைச்சர்களும் அன்றைய தினம் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார். அவர் 23–ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்நிலையில்

15-வது சட்டமன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், தற்காலிக சபாநாயகர் செம்மலை, சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை அடுத்து  நேற்று 15-வது தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. சட்டசபை மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்ட சபையில் உள்ள அனைத்து தலைவர்கள் படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வந்து அமர்ந்தனர். அமைச்சர்கள் அனைவரும் முதல் மற்றும் 2–வது வரிசையில் அமர்ந்திருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா காலை 10.53 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அவர் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி மகிழ்ச்சியுடன்  வரவேற்றனர். முதல்வர் ஜெயலலிதா தனது இருக்கையில் 10.54 மணிக்கு அமரும் முன் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை சபைக்குள் வந்தார்.

‘‘குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந்துறும்’’

என்ற திருக்குறளை படித்த அவர், ‘‘என் மக்களை உயர்த்துவேன் என்று மிகுந்த மன உறுதியுடன் முயற்சி செய்யும் ஒருவருக்கு தெய்வமே வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்து அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று திருக்குறளுக்கான பொருளையும் சொன்னார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் அவர் தலைமையின் கீழ் தமிழ்நாட்டை உயர்வடைய செய்வோம் என்றும் தற்காலிக சபாநாயகர் செம்மலை பேசினார். இதன் பின்னர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் தொடர்ந்து சபை நிகழ்ச்சியை செம்மலை நடத்தினார்.

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் பேரவை அலுவல்களை ஏற்று நடத்தும் வகையில் கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொண்டேன். சட்டமன்ற உறுப்பினராக அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். இன்று (நேற்று) இங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திடுகிறேன் என்று கூறி எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்ததற்கான பதிவேட்டில் செம்மலை கையெழுத்திட்டார்.

முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் துணை சபாநாயகர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்கள், பின்னர் தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் உறுதிமொழி எடுத்து கொள்வர். உறுதிமொழியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எடுத்து கொள்ளலாம். உறுதிமொழி வாசகம் மட்டுமே படிக்க வேண்டும். உறுதிமொழியை உளமாற உறுதி என்றும், கடவுள் அறிய என்றும் வாசகம் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை படித்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.

உறுதிமொழி எடுக்கும் கடமை புனிதமானது. எனவே அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் செம்மலை கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுப்பதற்கு முதலாவதாக முதல்வரை அழைக்கிறேன் என்று செம்மலை கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

சபாநாயகர் இருக்கைக்கு முன் சிறிய சாய்வு மேஜையுடன் மைக் வைக்கப்பட்டிருந்தது. தனது இருக்கையில் இருந்து அங்கு வந்து எம்.எல்.ஏ.வாக முதல்வர் ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். காலை 11.09 மணிக்கு அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சட்ட பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா என்னும் நான், சட்ட முறைப்படி நிறுவப் பெற்றுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார். பின்னர்  எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சபாநாயகர் முன்பு எம்.எல்.ஏ. ஆக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் இ.விஜயபாஸ்கர், எஸ்.பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.பி.ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி, பா.பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 28 அமைச்சர்களும் எம்.எல்.ஏ. ஆக உறுதிமொழி எடுத்தார்கள். அனைவரும் கடவுள் அறிய என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதன் பின்னர் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் பதவி ஏற்றார்கள். இதனை அடுத்து முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உறுதிமொழி எடுத்தனர். பகல் 11 மணிக்கு தொடங்கி பதவியேற்பு விழா பிற்பகல் 2.22 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 230  எம்.எல்.ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்