முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு: தலிபான் தீவிரவாத இயக்க புதிய தலைவர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 மே 2016      உலகம்
Image Unavailable

காபூல்  - ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து தலிபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சண்டையிட போவதாக அந்த இயக்கத்தினர் சபதமிட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து அவ்வப்போது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்ப்பு இருப்பினும் அமெரிக்கா இதனை தொடர்ந்து செய்து வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூரை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தி கொன்றது.

இதையடுத்து தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக முல்லாக் ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டான். இது தொடர்பாக தலிபான் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில்,  “இஸ்லாமிய அமீரகத்தின் (தலிபான்) புதிய தலைவராக முல்லாக் ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கவுன்சிலின் ஒருமித்த உடன்பாட்டின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்து பணியாற்ற உறுதி கொண்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

தலிபான் இயக்கத்தின் தலைவராக திகழ்ந்த முல்லா உமரின் மகன் முல்லா முகமது யாக்கூப், துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளான். தலிபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள முல்லாக் ஹைபதுல்லா அகுந்த் ஜாதா அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா, பாகிஸ்தான் முயற்சியில் இருதரப்பு இடையே அமைதிப்பேச்சுவார்த்தை ஏற்கனவே நடைபெற்றது. இந்நிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதாக பாகிஸ்தான் கூறிவந்தது.

ஆனால் இப்போது அமைதி பேச்சுவார்த்தை என்பதே கிடையாது என்று கூறிஉள்ள தலிபான் இயக்கம் தொடர்ந்து சண்டையிடுவோம் என்று சபதமிட்டு உள்ளது. தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லாக் ஹைபதுல்லா அகுந்த் ஜாதாவின் ஆடியோ செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. “தலிபான்கள் தலைகுனிய மாட்டார்கள், அவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாங்கள் ஆயுதத்தை கீழே போட்டுவிடுவோம் என்று மக்கள் நினைத்து உள்ளனர், ஆனால் நாங்கள் இறுதிவரையில் ஆயுதம் ஏந்தி போராடுவோம்,” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்