முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதனுக்கு பன்றியின் கருவிழியை பொருத்தி சீன டாக்டர்கள் சாதனை

வியாழக்கிழமை, 26 மே 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் - சீனாவில் பன்றியின் கருவிழியை மனிதனுக்கு பொருத்தி மீண்டும் பார்வையை கொண்டு வரலாம் என டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இன்னும் 3 வாரத்தில் அவருடைய கட்டு அவிழ்க்கப்பட உள்ளது. அப்போது அவருக்கு முழுமையாக கண் தெரியும் என்று அவருக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ஷாவ்செங் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- சீனாவில் 80 லட்சம் பேர் கண் பார்வை இல்லாமல் இருக்கிறார்கள்.

ஆனால், ஆண்டுக்கு 5 ஆயிரம் மனித கருவிழிகளே கிடைக்கின்றன. அதன் மூலம் ஆபரேஷன் செய்து பார்வை கொடுத்து வருகிறோம். கருவிழி தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் விலங்குகளின் கருவிழியை பொருத்தலாமா? என ஆய்வு செய்தோம். ஆடு, நாய், மாடு போன்றவற்றின் கருவிழிகளை ஆய்வு செய்த போது, அது பொருத்தமாக அமையவில்லை. எனவே, பன்றியின் கருவிழியை ஆய்வு செய்தோம். அது மனிதனுக்கு பொருத்தமாக இருந்தது. எனவே, பன்றி கருவிழியை எடுத்து பொருத்தி இருக்கிறோம்.

இது நல்ல பலனை கொடுத்தால் தொடர்ந்து இது போன்ற ஆபரேஷன் நடைபெறும். இது கண்பார்வை இல்லாதவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால், விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்துவதற்கு ஒரு தரப்பு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வேறு வித ஆபத்தான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்