முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க ரூ.1366 கோடியில் திட்டப்பணிகள் - சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

வியாழக்கிழமை, 26 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க சென்னை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ 1366 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.   இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகரை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு தமிழகஅரசு கருத்துரு அனுப்பியது. அதற்கிணங்க, சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படவுள்ள 100 நகரங்களில் முதற்கட்டமாக 20 நகரங்களை தெரிவு செய்து ஜனவரி 28-ம் தேதி முதல்  மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகரம் தேர்வாகியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் தமிழக அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.1366.24 கோடியில் சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குதற்கான பணிகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் செயல்படும்.

நிறுவனங்களின் சட்டம் 2013-ன் படி வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இது செயல்படும். இதில் தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 : 50 என்ற அளவில் பங்கு வகிக்கும். இந்த நிறுவனத்தின் தலைவராக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் செயல்படுவார்.

மேலும், சென்னை மாநகரின் காவல்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட 13 பேர் இயக்குனராக பணியாற்றுவார்கள். சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக தியாகராயநகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பின்வருமாறு:-

1. மின்கட்டமைப்பு, 2. குடிநீர் வழங்கல், 3. கழிவுநீர் அகற்றுதல் 4. மழைநீர் வடிகால்,5. திடக்கழிவு மேலாண்மை, 6. தகவல் தொழில்நுட்பம் இணைப்பு (ம) டிஜிட்டல் ஆக்கம், 7. துப்புரவுபணிகள் 8. பாதசாரி நடைபாதைகள், 9. வாகனம் இல்லா போக்குவரத்து, 10. அறிவார்ந்தபோக்குவரத்து மேலாண்மை அமைப்பு, 11. பசுமையான திறந்தவெளி பூங்காக்கள் சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான பணிகள் 2015-16-ம் நிதியாண்டில் துவங்கி 2019-20 நிதியாண்டிற்குள் முடிக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ள "சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்" என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்க அரசாணைஎண். 24.05.2016 மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கீழ்காணும் இயக்குநர்கள் குழுவின் மூலம் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்நிர்வகிக்கப்படும்.

1. தலைவர் - ஆணையாளர், பெருநகர சென்னை மாநகராட்சி.
2. இயக்குநர் - தலைமை நிர்வாக அதிகாரி  சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்.
3. இயக்குநர் - மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறையின் பிரதிநிதி.
4. இயக்குநர் - தமிழ்நாடு அரசின் நிதித்துறையின் பிரதிநிதி.
5. இயக்குநர் - நிர்வாக இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்
 கழிவுநீர் அகற்று வாரியம்.
6. இயக்குநர் - தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் பிரதிநிதி.
7. இயக்குநர் - துணை ஆணையாளர் (பணிகள்) பெருநகர சென்னை மாநகராட்சி.
8. இயக்குநர் - நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
9. இயக்குநர் - தலைமைப் பொறியாளர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.
10. இயக்குநர் - காவல் துறை கூடுதல் ஆணையர், சென்னை நகரம்.
11. இயக்குநர் - நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்னணுவியல் கழகம்.
12. இயக்குநர் - உறுப்பினர் செயலர் , சென்னைப் பெருநகர வளர்ச்சிகுழுமம்.
13. இயக்குநர் - சுயேட்சையான இயக்குநர்- நகர்புற வல்லுநர்,
14. இயக்குநர் - சுயேட்சையான பெண் இயக்குநர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்