முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வாக்குறுதிகளையும்,2019க்குள் மோடி அரசு நிறைவேற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உறுதி

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  மோடி அரசு முடிவுகளை விரைவாக எடுக்கும் அரசு என்ற நம்பிக்கையை மக்கள் பெற்றுள்ளனர். நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மோடி அரசு வருகிற 2019ம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் என பா.ஜ.கவின் தேசிய தலைவர்அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ.) அரசு பதவியேற்று 2ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையொட்டி பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  பாஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 2ஆண்டுகளில் வலிமையான அடித்தளத்தை அமைத்துள்ளது. அடுத்த 3ஆண்டுகளில் இந்தியாவின் மேம்பாட்டிற்கான  கட்டுமானம் உருவாக்கப்படும். வருகிற 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கும். அப்போது மக்கள் மீண்டும் எங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க மகத்தான  வெற்றி பெற மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஹைதரபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை, மற்றும் ஜவகர் லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைகளை காங்கிரசார் பெரிது படுத்தினார்கள். ஆனால் அதனை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் அரசு செயல்பாட்டில் திருப்தி அடைந்த மக்கள் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.கவிற்கு வாக்களித்து வெற்றியை தந்துள்ளனர். இந்த பிரச்சினைகளை எழுப்பிய நபர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது ஜவகர் லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினை, ரோகித் வெமுலா தற்கொலை பற்றியே பேசினார்கள்.. ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது ஆர்வம் காட்டிய மக்கள் பா.ஜ.கவிற்கு வாக்களித்து தங்களது முடிவை உறுதியாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10ஆண்டுகள் ஆட்சி செய்து, கஜானாவை காலி செய்து விட்டது. கொள்கைகள் ஸ்தம்பித்து இருந்தன. ஆட்சி நிர்வாகம் தடம்புரண்டிருந்தது. நம்பிக்கையற்ற நிலையே காணப்பட்டது.

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற  அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளடக்கிய 30 பா.ஜ.க. குழுக்கள் நாடு முழுவதும்  200 இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்தும்.முந்தைய அரசின் 10ஆண்டு கால ஆட்சியில்  ஊழல்கள் உச்சத்தில் இருந்தன. மோடி பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் எதிர் கட்சியினர் எந்த வித குற்றச்சாட்டும் சொல்ல முடியாத அளவிற்கு மத்தியஅரசு திறம் பட செயல்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதிர் கட்சியினர் அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பா.ஜ.,க தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்ற யூகம் உள்ளது.

அந்த முடிவு பின்னரே எடுக்கப்படும். மத்திய அமைச்சராக இருந்த சர்பானந்தா சோனோவால் தற்போது அசாம் முதல்வராக உள்ளார். அவர் வகித்து வந்த அமைச்சர் பதவி காலியாக உள்ளது. அந்த இடம் எப்போது பூர்த்தி செய்யப்படும் என்று கேட்கிறார்கள். அந்த அமைச்சர் பதவி நிரப்பப்படும். ஆனால் அது குறித்து தற்போது முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்