முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் உலகப்போரில் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மலரஞ்சலி

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2-ம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 2-ம் உலகப்போரின்போது 6-8-1945 அன்று அதிபர் ஹாரி ட்ருமேன் உத்தரவின்படி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசப்பட்ட பின்னர், சுமார் அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஹிரோஷிமா நகருக்கு வரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை குடித்து பல லட்சம் பேரை ஊனப்படுத்தி, வரலாற்றின் கருப்பு ஏடாக வர்ணிக்கப்படும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜப்பான் மக்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால், அப்படி மன்னிப்பு கேட்க முடியாது என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுதொடர்பாக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிறுவன நிருபரின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த ஒபாமா, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்காது என திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து ஜி-7 என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஜி-7 மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள இசே-ஷிமா நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் நாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று ஹிரோஷிமா நகருக்கு சென்றார். சென்ட்டோபாத் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைதி பூங்காவில் உள்ள அணுகுண்டு வீச்சில் பலியானவர்களின் நினைவிடத்துக்கு சென்ற அவர், அங்குள்ள நினைவுச் சின்னத்தின்மீது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என ஒபாமா கூறினார். அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடா ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்