முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த அடிப்படையில் பொருளாதார தடை விதித்தீர்கள் ? ஐ.நா.வுக்கு வடகொரியா கேள்வி

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - எந்த அடிப்படையில் எங்கள் மீது பொருளாதார தடை விதித்தீர்கள் என்று ஐக்கிய நாட்டு சபையிடம் வடகொரியா கேள்வி எழுப்பியுள்ளது.உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கும், அணு ஆயுதத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும் மத்தியில், வடகொரியா 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 3 முறை அணுகுண்டுகளை சோதித்துப்பார்த்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி முதன்முதலாக அணுகுண்டை விட பயங்கரமான ஹைட்ரஜன் குண்டை சோதித்து பார்த்தது, கடும் அதிர்ச்சியை அளித்தது. அது மட்டுமின்றி தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை அந்த நாடு சோதித்து வருகிறது.  இதன் காரணமாக வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் பலத்த குரல் எழுந்தது.

அதைத் தொடர்ந்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து, கடந்த மார்ச் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வடகொரியாவுக்கு அனுப்புகிற அல்லது வடகொரியாவில் இருந்து வருகிற சரக்குகள் அனைத்தையும், விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் எல்லா நாடுகளும் சோதனை போடலாம். வடகொரிய அணு உலைகளுக்கும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணை திட்டங்களுக்கும் தேவைப்படுகிற நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கம், டைட்டானியம் தாது, வனேடியம் தாது (வெண்ணாகம்), விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய படைகள் விஸ்தரிப்புக்கு உணவு, மருந்து தவிர்த்து எந்தவொரு பொருள் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடகொரியாவுக்கு கப்பல்கள், விமானங்களை குத்தகைக்கு விட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் ஐ.நா.வின் அனுமதி பெறாமல் எந்த வெளிநாட்டு நிறுவனமும் தனது கிளையை தொடங்க முடியாது. இதே போன்று வடகொரிய வங்கிகள், பிறநாடுகளில் கிளைகளை தொடங்க இயலாது. இந்த பொருளாதார தடைகள் வடகொரியாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுடன் மோதுகிற வகையில், அதன் பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஐ.நா.வுக்கான வட கொரியாவின் நிரந்தர பிரதிநிதி ஜா சாங் நாம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்கள் நாடு மேற்கொண்டு வருகிற அணு ஆயுத சோதனைகளுக்காகவும், அமைதியான நோக்கத்துடனான செயற்கை கோள் சோதனைகளுக்காகவும் ஐ.நா. பொருளாதார தடைகளை பிறப்பித்திருப்பதற்கு சட்டப்படியான எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.  அமெரிக்கா மீதோ அல்லது பிற நாடுகள் மீதோ அணு ஆயுத சோதனைகளுக்காக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்காக ஏன் பொருளாதார தடை விதிப்பது இல்லை? அந்த வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இரட்டை நிலையை கடைப்பிடிக்கிறது. அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலில் இருந்து எங்களை தற்காத்துக்கொள்வதற்குத்தான் அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. எனவே என்ன அடிப்படையில் எங்கள் நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தீர்கள் என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்