முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

சனிக்கிழமை, 28 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.  அதற்குப் பதிலாக வேறு தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.  தேர்தல் ஆணைய வரலாற்றில் இவ்வாறாக தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த இரு தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஜூன் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சியைத் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு கடந்த மே 16-ல் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 13-க்கு முன்னதாகவே நடத்த வேண்டும் என கட்சிகள் வலியுறுத்தி வந்தன. தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஜூன் 1-ல் இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையத்துக்கு யோசனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் பரிந்துரையைப் புறக்கணித்த தேர்தல் ஆணையம், "தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணம் தாராளமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதன் காரணமாக இரு தொகுதிகளுக்கான தேர்தலையும் இப்போதைக்கு ரத்து செய்வதே சிறந்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தேர்தலை நடத்தினால்தான் அது நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பார்வையாளர்கள், மத்திய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் அளித்த அறிக்கையின்படி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்