முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகை பிடிக்கும் பழக்கத்தால் 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      தமிழகம்
Image Unavailable

புதுக்கோட்டை : புகை பிடிக்கும் பழக்கத்தால் 8 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு அவர் பேசியது:

உலகில் 120 மில்லியன் மக்கள் புகைக்கு அடிமையாகி உள்ளனர். அதில், இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் ஆயுட்காலம் பாதியாகக் குறைகிறது. ஒவ்வொரு சிகரெட்டிலும் 4000-த்துக்கும் அதிகமான நச்சுப்பொருட்கள் உள்ளதால் அதை பயன்படுத்துவோருக்கு பக்கவாதம், மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு ஏற்படுவதுடன் நுரையீரல், வாய், குடல், மூச்சுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பும் ஏற்படுகிறது.

புகைப் பிடிக்கும் பழக்கத்தால் 8 வினாடிக்கு ஒருவர் வீதம், அதாவது நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே, புகைப் பிடித்தலை கைவிடுவதன் மூலம் நீண்ட காலம் வாழ்வதுடன், அவர்களின் குடும்பத்தினரின் வாழ்நாளும் நீட்டிக்கிறது.  இதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவு செவிலியர்கள், புகைப் பிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்றார். அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட கையேட்டை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் த.பரிமளதேவி பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்