முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இந்த அணை தொடர்பாக உள்ள பிரச்சினையை தமிழக அரசுடன் பேசி தீர்ப்போம் என்று கேரளாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் கடந்த  16ம்தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது.  அந்த கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்தது. இதனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை.

புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் பதவியேற்றார். அவர் கள் இறக்கும் ஏழை தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் முதல் முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்றதும் பினராயி விஜயன்  தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் கேரள அதிகாரிகள் குழுவும் சென்றது.

டெல்லியில் பிரதமர் மோடியை பினராயிவிஜயன் சந்தித்தார். அப்போது பினராயிக்கு பிரதமர்  மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமரிடம் கேரள மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றிய கோரிக்கை மனுவையும் பினராயி விஜயன் வழங்கினார்.  அந்த மனுவில், கேரளாவில் முக்கிய தொழிலாக ரப்பர் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரப்பர் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

ஆழ்கடலுக்கு சென்று  மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். சுற்றுலா, ஆயுர்வேதம் போன்றவை வளர்ச்சி பெற  புதிய திட்டங்களுக்கு  நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்களை பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அவர் இடது கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் கேரள அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு, பேட்டி அளித்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,

புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக பிரதமர் ,  ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தேன். எங்களின் கோரிக்கைகளையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். 5ஆண்டுகளில் கேரளாவை முதன்மை மாநிலமாக மாற்ற முழு முயற்சி எடுப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவோம். கேரளாவில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

முல்லைப்பெரியாறு அணை  பலமாக உள்ளது . எந்த வித பிரச்சினையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை தொடர்பாக உள்ள பிரச்சினைக்கு  தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காண்போம். முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற நிபுணர்கள் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே அந்த அணைக்கு பதில் புதிய  அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முரண்பாடுகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. அதேசமயம் முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளாவில் உள்ள பொது மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். அணை பகுதியில், ஏராளமான ஏழை குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அணையின் நீர்மட்டத்தை  உயர்த்த முடியாது. தண்ணீர் எல்லோருக்கும் தேவையாக உள்ளது. எனவே முல்லை பெரியாறு அணை நீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படும்வகையில் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது கேரளாவில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.  மேலும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும் புதிய அணை கட்டப்போவதாகவும் பிரச்சினையை கிளப்பியது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. புதிய அணையை கட்ட மாட்டோம் என்று அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்