முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு பிரசாத் மகள் மிசா பாரதி ராஜ்யசபை எம்.பி.யாகிறார்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2016      அரசியல்
Image Unavailable

பாட்னா, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, ராஜ்யசபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பிகார் மாநில முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபோது தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார். கடந்த நவம்பர் மாதம் பிகார்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணியில் லல்லு சேர்ந்து கொண்டார். தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் தனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை களம் இறக்கினார் லல்லு. இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதன்பிறகு தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவியும் (26 வயதில் துணை முதல்வரானவர்), தேஜ் பிரதாப்புக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்தார் லல்லு.

அந்தத் தேர்தலில் லல்லுவின் ஆர்ஜேடி கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால் லல்லு கேட்ட முக்கியமான இலகாக்களை முதல்வர் நிதிஷ்குமாரும் மறுப்பேதும் பேசாமல் வழங்கி விட்டார். இந்த வளர்ச்சிக்கு லல்லுவின் மகள் மிசா பாரதியும் (40) ஒரு முக்கிய காரணம். தனது சகோதர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் மிசா பாரதி. இந்நிலையில், பிகார்மாநிலத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலியாகிறது. அந்த இடங்களுக்கு எம்எல்ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் லல்லு கட்சி 2 இடங்களையும், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களையும் பா.ஜ.க ஒரு இடத்தையும் பகிர்ந்து கொள்ள உள்ளன.

அரசியலில் மகன்கள் இருவரையும் இறக்கிவிட்ட பின்னர், இப்போது ராஜ்யசபைக்கு மனைவி ராப்ரி அல்லது மகள் மிசா பாரதி ஆகிய இருவரில் ஒருவரை அனுப்ப லல்லு திட்டமிட்டுள்ளார். மனைவி ராப்ரி ஏற்கெனவே முதல்வர் பதவி வகித்தவர். எனவே, மிசா பாரதியை ராஜ்யசபை எம்.பி.யாக்க லல்லு முடிவெடுத்துவிட்டதாக அவரது கட்சி வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியில் மகள் மிசாவை களம் இறக்கினார் லல்லு. அதனால் லல்லுவின் நெருங்கிய உதவியாளர் ராம் கிர்பால் யாதவ் கடும் அதிருப்தி அடைந்து பாஜக.வில் சேர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ராம் கிர்பாலிடம் மிசா பாரதி தோற்றுப் போனார். தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் ராம் கிர்பால். அந்தத் தேர்தலில் மகளை தேசிய அரசியலுக்கு கொண்டு வரும் லல்லுவின் முயற்சி தடைபட்டது. இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக்குவதன் மூலம் டெல்லியில் மிசா பாரதி இனி வலம் வருவார் என்று கட்சியினர் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்